சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
149
அட்லாண்டா அதை வாங்க மறுத்தாள். “நான் எய்தேன். ஆனால் கொல்லவில்லை. கொன்ற உங்களுக்கே அதுஉரியது” என்றாள்.
மெலீகர் மேலும் வற்புறுத்தி, “நான் கொல்லாவிட்டாலும் உங்கள் அம்பால் இது சிறிதுநேரத்தில் செத்தேயிருக்கும். நான் உடனே அதைக் கொன்றது வேட்டுவரின் தோழமை உரிமையினால்தான். ஆகவே, அதே தோழமை உரிமைப்படி தோலைப் பெற்றுக்கொள்க" என்றான்.
அவன் பெருந்தன்மையையும், உள்ளன்பையும் கண்டு அவள் உள்ளம் பூரித்தாள். அவன் மீது தனக்கு அடக்க முடியாத பாசம் இருப்பதை அவள் அப்போதுதான் உணர்ந்தாள்.
அவன், அவளிடம் கொண்ட ஆழ்ந்த நேசமும் விரைவில் எல்லோருக்கும் விளங்கிற்று.
மெலீகரின் தாய்மாமன்மார் இருவர் இருந்தனர். அவர்களும் பன்றி வேட்டையில் பங்கு கொண்டிருந்தனர். பன்றியின் தோலைத் தம் குடும்பத்தவருக்கும் நகரத்தவருக்கும் ல்லாமல் வேறொருவருக்கு மெலீகர் உரிமையாக்கியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அத்துடன் அது ஆடவனா யிராமல், ஒரு பெண்ணாயிருந்தது அவர்களுக்கு ன்னும் புழுக்கத்தை உண்டு பண்ணிற்று. எப்படியும் அதை அவளிடமிருந்து பறிக்க அவர்கள் திட்டமிட்டனர்.
பெண்ணாயினும் அவளை நேரடியாகத் தாக்க அவர்களுக்குத் துணிவும் வீரமும் போதவில்லை. ஆகவே, அவள் தனியே செல்லும் சமயம் பார்த்து முன்பின்னாகச் சென்று அவளை மடக்கி அதை அவளிடமிருந்து பறிக்க முயன்றனர். எதிர்பாராத் தாக்குதலால் அட்லாண்டாவும் செயலிழந்து நின்றாள்.
கோழைத்தனமான இச்செயலை மெலீகர் தற்செயலாக அவ்விடம் வந்து காண நேர்ந்தது. தன் தாயுடன் பிறந்தவர்கள் என்றுகூடப் பாராமல் அவன் அவர்களை வாளால் தாக்கினான். கோழையாகிய இருவரும் ஓட முயன்று வாளுக் கிரையாயினர்.