பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

161

தானே பருவமடையும் தறுவாயில் அரசன் அவளையும், அவள் பாங்கியர்களையும் கோபுரத்தைப் பார்வையிடும்படி அழைத்துச் சென்றான். கீழறைகளில் உணவுப்பண்டங்கள் கண்டு அவர்கள் வியப்படைந்தனர். ஆனால், மேலே போகப் போகக் கோபுரத்தின் பளபளப்பான பித்தளைச் சுவர்களின் அழகும், பெண்டிர் இன்ப வாழ்வுக்கும் ஒப்பனைக்குமுரிய மாட கூடங்களும் அவர்கள் கண்களைக் கவர்ந்தன. அவர்கள் அவற்றில் தம்மை மறந்து விளையாடியிருந்தனர். அரசனும் அவனுடன் வந்த ஒரு சில ஏவலாளரும் இதுசமயம் பார்த்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர்.கோபுரத்தினுள் நுழைவதற்கான ஒரே வாயில் வெளியிலிருந்து அடைபட்டது. அதனை அடைவதற்கான ஒரே பாலமும் அழிக்கப்பட்டது.

பெண்டிர் நெடுநேரம் சென்றபின்பு தாம் தனிப்பட்டு விட்டதையும் கோபுரத்தில் அடைப்பட்டதையும் கவனித்தனர். அவர்கள் கூக்குரலிட்டனர். அழுதனர்; தொழுதனர். ஆனால், அலைகளின் தொலை இரைச்சல் தவிர அவர்களை எதுவும் அணுகவில்லை. அவர்களுக்குத் துணையாக விடப்பட்ட ஏவலாள் ஒருவனே. அவனும் ஊமையும் செவிடுமான ஓர் அலி. அவர்களுக்கு உணவு வட்டிக்கும் பொறுப்பும், நாள்தோறும் படகில் வரும் புதிய பால் முதலிய பொருள்களைக் கயிறு கட்டிக் கூடைகளில் பலகணி வழியே பெறும் பொறுப்பும் அவனிடம் விடப்பட்டிருந்தது.

நாட்கள்பல சென்றன. தானே பருவமடைந்து முன்னிலும் அழகுடையவளாய்த் திகழ்ந்தாள். ஆனால், அவள் வாழ்வில் மகிழ்ச்சியில்லை. தன் தந்தையே தன்னைச் சிறைப்படுத்தியதை எண்ணி அவள் மனமாழ்கினாள். தேவர்கள் தந்தையாகிய ஜீயஸ் பெருமானை அவள் நாள்தோறும் வழிபட்டுக் குறையிரந்தாள்.

தானேயின் கனவில் ஜீயஸ் பொன்முகில்மீது தவழ்ந்து வந்து காட்சி யளித்தான். அவள் தன் வழிபாடு நிறைவேறியது கண்டு மகிழ்ந்து மெய்ம் மறந்தாள். கனவு அரைக்கனவாக நீண்டது. ஜீயஸ் அழகிய மனித உருவுடன் வந்து அவளுடன் உரையாடினான். அவன் ஜீயஸ் என்பதை அவள் சிறிது நேரத்தில் மறந்தாள். இளைஞன் உருவில் ஜீயஸ் அவளுடன் அளவளாவிப் பேசினான்.