162
உ
அப்பாத்துரையம் - 36
அடுத்தநாள் முதல் தானேயின் வாழ்வில் மாறுதல் ஏற்பட்டது.இரவில் கண்ட பொன்மயமான அழகிய வடிவிடம் அவள் ஈடுபட்டாள். தொடுத்து மூன்று இரவுகள் கழிந்தபின், ஜீயஸ் பழையபடி தன் ஒளி உருவம் காட்டி விடைபெற்றுக் காண்டான். "கண்மணி தானே, நான் உன் வழிபாட்டில் ஈடுபட்டு விட்டேன். ஆனால், அதற்காக மட்டும் வரவில்லை. என் கூறாக உனக்கு இப்போது கரு விளைந்துள்ளது. உன் மகன் உலகில் அரும்புகழ் நிறுத்துவான்” என்று கூறி அவன் அகன்றான்.
தானேயின் நாட்கள் முன்னிலும் மகிழ்ச்சியாகக் கழிந்தன. அவள் ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றாள். பாங்கியரும் இச் சிறைக்கூடத்திலிருந்தே அவள் தெய்வ அருளால் இத்தகைய அருங்குழவி பெற்றதை எண்ணி மகிழ்ந்து கூத்தாடினர். பெர்ஸியஸ் என்ற பெயருடன் குழந்தை சிறைக் கோபுரத்தில் வளர்ந்தது.
சிறைக்குள்ளிருந்தே தானே தெய்வ அருட்குழவி ஒன்றை ஈன்றாள் என்ற செய்தி அரசனுக்கு எட்டிற்று. அவனால் இப்புதிய இடரைப் பொறுக்க முடியவில்லை. இருவரையும் தடங்கெட அழிக்க அவன் புதிய சூழ்ச்சி செய்தான்.
தாயையும் சேயையும் அவன் சிறையிலிருந்து யாரும் அறியாமல் வெளியேற்றினான். ஒருவர் குந்தியிருக்கப் போதுமான மரத்தொட்டி ஒன்றில் இருவரையும் வைத்துக் கப்பலிலேற்றி, நடுக்கடலில் விட்டுவிடும்படி அவன் கட்டளை யிட்டான். தானேயின் கதறலோ, பிள்ளையின் மருட்சியோ அவன் உறுதியைக் குலைக்கவில்லை.
தானேயின் கதறலை மனிதர் யாரும் கேட்கவில்லை. ஆனால், இறைவன் ஜீயஸ் காதுக்கு அது எட்டிற்று. அவன் தென்றலை அனுப்பி, அத்தொட்டியை அப்படியே மிதக்க விட்டு, இறுதியில் ஸெரிஃவஸ் என்ற தீவில் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தான்.
ஸெரிஃவஸ் வலைஞர்கள் வாழ்ந்த தீவு. பாலிடெக்டிஸ் என்ற வலைஞரின் தலைவனே அத்தீவின் அரசனாயிருந்தான். அவன் தம்பி டிக்டிஸ் வலைகளை உலர்த்தக் காலையில் கடற் கரைக்குச் சென்றபோது, தானேயும் குழந்தையும் மிதந்துவந்த