பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

165

அதேனா திருவருளும் தெய்வப் படைக்கலங்களின் உதவிகளும் தனக்குக் கிடைத்திருப்பதை நினைவூட்டிப் பெர்ஸியஸ் தாய்க்கு ஆறுதல் கூறினான். ஆனால், அவன் தாயைப்பற்றிக் கவலைப் பட்டான். தான் இல்லாதபோது தன் தாயிடம் பாலிடெக்டிஸ் கொடுமை பண்ணுவானே என்று அவன் மறுகினான். அதற்கும் அதேனாவையே நம்புவதென்று அவன் தீர்மானித்தான். அதேனாவின் கோவில் எல்லைக்குள் இருப்பவரைத் தாக்க அரசர்களும் அஞ்சுவர் என்பதை அவன் அறிவான். ஆகவே, அவன் தாயை அதேனாவின் கோயிலெல்லையில் கொண்டு தங்க வைத்துச் சென்றான்.

அதேனா கூறிய வழியே பெர்ஸியஸ் தெய்வீக மிதியடிகளிலேறிப் பறந்து சென்றான். அந்நாளைய நாகரிக உலகமாகிய தென் ஐரோப்பா கடந்து அவன் நடு ஐரோப்பா, வட ஐரோப்பா மீது பறந்தான். உலகின் வடகோடியை அடுத்து மனிதரின் ஊழை வகுத்த மூன்று கிழக்கன்னியர் வாழ்ந்த கிரேயா நாட்டை அவன் அடைந்தான். இம்மூவரும் குருடர்கள்; ஆனால், மூவருக்கும் பொதுவாக ஒரே கண் இருந்தது. அதை மாறி மாறிப் பெற்றுத்தான் அவர்கள் பார்க்க வேண்டும்.

மெடூசாவைப்பற்றிய விவரங்கள் யாவும் அவள் இருந்த நாட்டின் திசையும் வழியும் தெரிந்தவர்கள் இக்கிழக் கன்னியர்கள் மட்டுமே. அவர்களிடமிருந்துதான் அதைப் பெர்ஸியஸ் பெற வேண்டும் என்று அதேனா கூறியிருந்தாள். அவள் கூறியபடியே செயலாற்ற எண்ணிப் பெர்ஸியஸ் அவர்கள் அருகே சென்றான்.

பெர்ஸியஸ் பின்புறமிருந்து வருவதைக் காற்றசைவால் கிழக்கன்னியருள் ஒருத்தி அறிந்தாள். உடனே வருபவனைப் பார்ப்பதற்காக அவள் பக்கத்திலிருந்தவளிடம் கண்ணைக் கேட்டாள். கண் கைக்குக் கை மாறியது. அந்த நேரத்துக்கே பெர்ஸியஸ் காத்திருந்தான். கண் ஒரு கையிலிருந்து ஒரு கைக்கு மாறுமுன் அவன் அதைத் தட்டிப் பறித்துக் கொண்டான். மூவருக்கும் உயிரினும் மேலான செல்வம் அந்தக் கண். அதை யாரோ பறித்துவிட்டது உணர்ந்த மூன்று குருட்டுக் கிழவியரும் கோவெனக் கதறினார்கள்.