(168) ||.
அப்பாத்துரையம் - 36
எனக்கு உதவ வந்த அன்பரே! என் இடம் இன்னும் முற்றிலும் தீரவில்லை. இங்கிருந்து போக முடியுமானால் விரைந்து போய்விட வேண்டும். ஆகவே, சுருக்கமாகக் கூறுகிறேன்” என்று தன் வரலாற்றைக் கூறலானாள்.
“என் பெயர் அண்ட்ரோமீடா. என் தந்தை கெஃவியஸும் தாய் கஸியோபியாவும் அருகிலுள்ள நாட்டை ஆள்பவர்கள். நான் பருவமடைந்த போது என் தாய் என்ன காலக் கேட்டினாலோ என் அழகைப்பற்றி எல்லை கடந்து பெருமைப் பட்டாள். கடலிறைவி நெரியஸ் அழகுகூட என் அழகுக்கு ஈடாகாது என்று அவள் புகழ்ந்துவிட்டாள். கடலிறைவன் தன் ஒற்றர்கள் மூலம் இதை அறிந்து என்மீதும் எங்கள் நாட்டின் மீதும் ஒரு பெரும்பூதத்தை ஏவி விட்டான். என்னை அப்பூதத்துக்கு இரையாக அனுப்பி விட்டால், நாடும் பிறரும் காப்பாற்றப் படலாம் என்று செய்தி கேட்டு, என் தாய் தந்தையரே கண்ணீருடனும் கதறலுடனும் என்னை இங்கே கட்டிவிட்டுச் சென்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அப்பூதம் வந்துவிடும். நாம் அதற்குள் ஓடிவிட வேண்டும்."
பெண்மணி இவ்வளவு கூறுமுன் பாறை நடுங்கும்படி பூதம் அலறிக் கொண்டு வந்தது. அண்ட்ரோ மீடாவுக்கு வந்த உணர்வும் போயிற்று. ஆனால், பெர்ஸியஸ் விரைந்து தன் வாளைச் சுழற்றிப் பூதத்தை வெட்டி வீழ்த்தினான். அண்ட்ரோ மீடாவை மீண்டும் உணர்வுபெறச் செய்விப்பது பெருங்காரிய மாய்ப் போய்விட்டது. அவள் உணர்வு பெற்றதும் தானும் இளைஞனும் உயிருடன் இருப்பது கண்டு வியந்தாள். அருகே அச்சந்தரும் பூதத்தின் உருவம் துண்டு பட்டுக் கிடப்பது கண்ட பின்னரே, தன் துன்பம் ஒழிந்தது என்று அவளால் நம்ப முடிந்தது. அண்ட்ரோமீடாவும் மன்னன் கெஃவியஸிடமும் அரசி கஸியோபியாவிடமும் வந்தனர். அரசன் அரசியரால் தம் கண்களை நம்ப முடியவில்லை. செய்தி முழுவதும் கேட்டபின் அரசி அண்ட்ரோமீடாவையும், அரசன் பெர்ஸியஸையும் அணைத்து இன்பக் கண்ணீராட்டினர்.
பெர்ஸியஸும்
"எங்கள் பழியைப் போக்கி எங்கள் இன்னுயிர்ப் பாவையையும் உயிருடன் எங்களுக்குத் தந்த உமக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்" என்றான் அரசன்.