176
அப்பாத்துரையம் - 36
பெல்லராஃவானுக்கு இந்த மண்ணுலகைச் சுற்றுவதில் விருப்பமில்லை. 'ஒன்று தேவருலகுக்குச் செல்ல வேண்டும்; அல்லது அம்முயற்சியில் மாள வேண்டும்' என்று கருதினான். பெகாஸஸிடம் இதை அவன் கூறியபோது, அது தன் வாழ்விலேயே முதல் தடவையாகக் கனைத்தது. அதன் கண்ணில் இன்னதென்று கூறமுடியாத பேரொளி தோன்றிற்று.
இத்தடவை பெகாஸஸ் தலையை உயர்த்திக் கொண்டு மேனோக்கிப் பறந்துகொண்டே இருந்தது. வானுலகு அருகே வரும்போது தேவர்களின் தந்தையான ஜீயஸ் ஒரு தேவனை அனுப்பி ஈ வடிவில் சென்று குதிரையின் கண்களைக் கடிக்குமாறு பணித்தார்.
கண் கடிக்கப்பெற்று குதிரை நோவு தாங்காமல் தலையைக் கவிழ்த்துக்கைகால் உதறிற்று. பெல்லராஃவான் குதிரையிலிருந்து நழுவி விழுந்தான். அவன் உடல் மண்ணுலகத்தை எட்டுமுன் அது எரிந்து சாம்பலாயிற்று. பெகாஸஸை ஜீயஸ் தம்மிடம் அழைத்துத் தம் ஊர்தியாக்கிக் கொண்டார்.
பெகாஸஸ், ஜீயஸுக்கு எப்போதும் அடங்கி நடந்தாலும், ஒவ்வொரு சமயம் பெல்லராஃவானை நினைத்து முரண்டிக் கொள்ளும். அதன் உள்ளக் குறிப்பறிந்த ஜீயஸ் புன்முறுவலுடன் அதன் மனத்துயர் அகலும் வரை அதை வாளா விட்டுவைத்து வந்தார். பெகாஸுஸும் நாளடைவில் இணக்கமாகவே நடக்கத் தொடங்கிற்று.