பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

||-

அப்பாத்துரையம் - 36

கோலம் ஐயத்தைக் கிளப்பிவிட்டது. அவன் அந்த ஊர் அரண்மனை அம்பட்டன் பெட்ரூக்கோ. இன்னது என்ற தெரியாவிடினும், எதையும் துளைத்தறியும் திறம் உடையவன் அவன். அவன் கூரிய பார்வையைக் கண்டு எவருமே நடுங்குவர். இரவு ஓர் ஆண்டியைப் பெரிகில் இட்டுச் சென்றதையும் இரவே என்றும் ஒருங்கே கூடிச் செல்லாத கணவன் மனைவியர் அவ்வளவு தொலை ஒன்றாகச் சென்று மீள்வதையும் சேர்த்து இணைத்து அவன் கற்பனை ஊகம் வேலை செய்தது.

அவன் அவர்கள் வந்த திசையில் சென்று, புதுமணல் கிளறப் பட்டிருப்பதைக கண்டான். அதைத் தானும் கிளறினான். அவன் எதிர் பார்த்ததற்கு, மேலாக அவன் கண்ட காட்சி அவன் ஆவலைக் கிளப்பிவிட்டது. பிணத்தைக் கண்டதே அவன் முதலில் மலைப்படைந்தான். பின் கிளர்ச்சியும் எழுச்சியும் கொண்டு, மன்னனிடம் ஓடோடியும் சென்று விவரமறிவித்தான்.

மன்னன் அல்காதியும் பேராசையுடையவன்; கொடியவன்; மக்கள் உயிரோ, பணமோ அவன் கைப்படுவதுதான் தாமதம். அவன் கொடுமையும் பேராசையும் இறக்கை விரித்துப் பறக்கும்! அம்பட்டன் சொற்கள் அவனைக் கிளர்ந்தெழச் செய்தன. "ஒரே இரவில் கொள்ளை நடந்து, கொலை நடந்து, பிணமும் புதைக்கப்பட்டு விட்டதா! இதில் பணத்தின் தொடர்பு நிறைய இருக்க வேண்டும். அப்படியானால் பார்ப்போம்" என்று அவன் துடையைத் தட்டிக் கொண்டு வீறிட்டான்.

உண்மையைத் தவிர வேறு எதுவும் தன்னைக் காக்க முடியாது என்று பெரிகில் தெரிந்து கொண்டான். ஆனால் அவன் உண்மையைக் கூறியும் பயனில்லை. பொருளில்லாத ஆண்டிக்கு ஒருவன் இரக்கப்பட்டான் என்பதை அவனைத் தவிர வேறு யாரும் நம்பவில்லை ஆனால் இறக்கும்போது அவன் தந்த சந்தனப்பெட்டியின் செய்தி வந்ததே, மன்னன், “ஆ, அப்படிச் சொல்லு. எங்கே அந்தப் பெட்டி? அதைக் கொடுத்துவிடு. நீ போகலாம்” என்றான்.

பிணத்தைப் புதைக்கும்போது பெட்டியைப் பெரிகில் கழுதை மீதிருந்த ஒரு பையில் செருகி வைத்திருந்தான். அது இன்னும் அதில்தான் இருந்தது. அதைச் சுட்டிக் காட்டினான்.