(186) ||
அப்பாத்துரையம் - 36
நானும் தன்னலமற்ற ஒரு நற்செயலாவது செய்திருக்கிறேன் என்று ஆறுதல் என் கால்களுக்கு உரம் தரும்” என்றான்.
66
நீ
'தன் மனைவி அறிந்த உலகத்தினும் பரந்த ஒரு உலகம் உண்டு' என்ற நம்பிக்கையால் பெரிகில் உள்ளம் குளிர்ந்தது. “அண்ணா, நானும் ஒரு வகையில் ஆண்டவனை நேசித்ததுண்டு. ஆனால் நம்பிக்கையும் உறுதியும் என்னிடம் இல்லை. எனக்கு நீ அதை அளித்தாய். நான் செய்த நற்செயலுக்கு இதுவரை நான் எவ்வளவோ கழிவிரக்கப்பட்டு என்னையே நொந்து கொண்டிருந்தேன். நீ ஆறுதல் தந்தாய். இந்தத் தாளின் இரகசியத்தால் நன்மை வராவிட்டால் அதற்காக நான் இனி வருந்த மாட்டேன்.ஆனால் நன்மை வந்தால், இருவரும் பகிர்ந்து கொள்வோம். இம் முயற்சியில் என்னிடம் உண்மையாய் இருந்த உனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்” என்றான்.
கடைக்காரன் இதை மனமுவந்து ஏற்றான்.
தாளில் சிறு எழுத்தில் குறித்திருந்தவற்றை அவன் இப்போது பெரிகிலுக்கு விளக்கினான். "இந்தத் தாளுடன் பெட்டியில் ஒரு மெழுகுவர்த்தி இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதைக் கையிலெடுத்துக்கொண்டு ஏழு கோபுரங்களில் ஏழாவது கோபுரத்தின் அடிவாரம் செல்ல வேண்டும்; நடு இரவு நேரத்தில் இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே அதனை ஏற்ற வேண்டும்; அப்போது புதையலை நோக்கி வழி ஏற்படும். கையில் விளக்கு இருக்கும்வரை வழியில் எந்த இடருக்கும் அஞ்ச வேண்டாம். ஆனால், விளக்கு அணையத் தொடங்கும்போதே வெளியே வந்துவிட வேண்டும். ஏனென்றால், அணைந்தவுடன் திறந்த வழி அடைத்துக் கொள்ளும்.
பெரிகிலுக்கு இப்போது பெட்டியிலிருந்த பாதி எரிந்த மெழுகுவர்த்தி நினைவுக்கு வந்தது. நல்லகாலமாக அஃது இன்னும் தன் கழுதையின் மேலுள்ள பையிலேயேதான் இருந்தது. அடுத்தநாள் இரவு மனைவி மக்கள் தூங்கிய பிறகு அந்த மெழுகுவர்த்தித் துண்டை எடுத்துக் கொண்டு கடைக்காரனுடன் புறப்பட்டு ஏழுகோபுரத்தை நோக்கிச் சென்றான்.