பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. நெய்தலங்கானல்

மலாகி கார்ன்வால் மாவட்டத்தின் கடற்கரை; ஒரேபாறை மயமானது. பாறைகள் செங்குத்தாகவும் அடிக்கடி கடற்கரை நெடுகப் பலகல் தொலைவுவரை தொடுப்பாகவும் கிடந்தன. அத்துடன் அவை சுவற்போல் அலைகள் வந்து மோதும் இடத்திலேயே திடுமென இறங்கி முடிவுற்றதனால், கடற்கரைப் பக்கம் எவரும் எளிதில் வர முடியாமல் இருந்தது. பாறைகளில் ஒரு சில இடுக்குப் பிளவுகள் இருந்தன. இவற்றின் வழியாகக்கூட மக்கள் மிக அரும்பாடுபட்டே ஏறி இறங்கிக் கடலின் அலைவாய்க்குச் செல்ல முடியும். அப்படிச் செல்வதும் பேரிடர் தருவதாகவே இருந்தது. ஏனென்றால் பாறைக்கும் அலைக்கும் இடையே மண்திடலோ மணலோ எதுவும் கிடையாது. எப்போதேனும் சிறிது மணல் திரண்டால்கூட, அஃது ஒரு வேலி ஏற்றத்தில் காணப்பட்டு, அடிக்கடி அதே வேலி இறக்கத்திற்குள் காணாமல் மறைந்துவிடும். வேலி ஏற்றத்தில் அலைகள் பொங்கிவரும் வேகத்தில் எவரும் பாறை ஏறுமுன் அலைகளுக்கு இரையாக வேண்டி வரும்.

கார்ன்வால் நிலப்பகுதி வேளாண்மைக்குப் பேர் போனதல்ல. ஆனாலும் ஓரளவு வேளாண்மைக்கு ஏற்ற வசதியை மக்கள் அங்கே தேடிக் கொண்டிருந்தனர். கடற்கரையில் அலைகள் பாறையருகே பேரளவாகக் கடற்பாசிகளைக் காண்டு ஒதுக்கிவந்தன. அக்கடற்பாசி நிலத்துக்கு நல்ல ஊட் ட்டம் தருவது என்று கண்ட மக்கள், ஆண்டுதோறும் அதைப் புதிய புதிய உரமாகப் பயன்படுத்தி நிலவளங்கண்டனர். இதனால் வேளாண்மைக்கு உறுதுணையான முக்கிய தொழில்களாகக் கடற்பாசி திரட்டும் தொழிலும், அதைத் தொலை உள்நாட்டுப் பகுதிவரை கொண்டுசென்று விற்கும் தொழிலும் வளர்ச்சியடைந்தன.