அப்பாத்துரையம் - 36
(196) ||__. சுவர் போன்ற பாறையில் ஒட்ட வைத்திருப்பது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அது பாறையின் சரிவில் ஒரு குறுகிய பிளவின் நடுவேயுள்ள சிறிதளவு அகன்ற ஒரு திட்டில்தான் இருந்தது. மலாகியின் முன்னோர்கள் அந்த திட்டைக் கண்டுபிடித்து, அதில் வீடுகட்டி வாழ்ந்து, பிளவையும் அதன் வழியாகக் கடலுக்கு இறங்கும் பாதையையும் தம் தனி உரிமையாக்கிக் கொண்டிருந்தனர். நீண்டகாலமாக எவரும் இவ்வுரிமையில் போட்டியிட எண்ணவில்லை. ஏனென்றால் பாறைகளிடையே புயற்காற்றுடன் தோழமை கொள்ளப் பலர் விரும்ப முடியாது. பிளவில் ஏறுவதும் இறங்குவதும் எளிதான காரியமும் அல்ல.
மலாகி, பாசி சேகரம் பண்ணி விற்பதுடன் தன் தொழிலை நிறுத்தி விடவில்லை. அவன் தன் உடலுழைப்பால் அப்பாசிக்கும் அதைச் சேகரம் பண்ணிக் கொண்டு செல்லும் வழிக்கும் உள்ள தன் காப்புரிமையைப் பெருக்கிக் கொண்டான். கடும் பாறைகளிடையே அவன் முன்னோர்கள் காலடிபட்டு ஏற்பட்ட முரட்டுத்தடத்தை அவன் அருமுயற்சியால் படிப்படியாய் ஏறும் ஏணிப்படிகளாக்கினான். பாசிகளை மிகுதியாகக் கொண்டு செல்ல ஒரு கழுதையை வாங்கி, அந்தப் படிகளில் ஏறியிறங்கும்படி அதைப் பழக்கினான். மலாகியைப் போலவே அவன் கழுதையும் அக்கடுமையான வேலையில் பழக்கப்பட்டு உடலுரம் பெற்றிருந்தது.
கிழவனான பின்புகூட மிலாகியின் உடல் இரும்பு உடலாகத்தான் இருந்தது. ஆனால், இரும்பு உடல்கூட இரும்பாய் இருக்க முடியாதன்றோ! அவன் கைகள் சிறிது சிறிதாகத் தளர்ந்தன. அவன் கால்கள் படிப்படியாகச் சற்றே தள்ளாடத் தொடங்கின. தன் கிழப்பருவம் பிறர் இளமைக்கு ஈடானாலும், அக் கிழப்பருவத்துக்கும் கிழப்பருவம் வரத் தொடங்கிவிட்டது என்று அவன் அறிந்தான். எனவே, அவன் தன் வேலையின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள வேண்டி வந்தது.
அவன் கடலுக்குப் போவதையே நிறுத்தும் காலமும் வந்துவிட்டது! பன்னிரண்டு மாதமாக அவன் கடலுக்குள் இறங்கிச் சென்றதேயில்லை. ஆறுமாதமாக அவன் கடற்பாசி