சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
203
புரண்டன. கடல், புயல், பாறை ஆகியவற்றின் தூங்கு நாடிகளையும் விழிப்பு நாடிகளையும் நன்கு அறிந்த மாலிக்கு இவ்வடையாளங்களின் பொருள் தெரியும். அது பாசி சேகரிப்பதற்குரிய வேளையல்ல; பாசி வளத்தை வாளா பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நேரம்! அந்தக் கோரப் புயலின் வேகம் அடங்கியபின்தான் ஒதுங்கிய பாசிகளைத் திரட்ட முற்படலாம். ஆகவே, அவள் கடலின் கலையிலுள்ள உயர்பாறை ஒன்றிலிருந்து கடலை ஆவலுடனும் ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஃபார்ட்டிக்கு மாலியின் செய்தி தெரியாது. '‘அவள் பெண்தானே, கடலுக்குள் செல்ல அஞ்சி, தொங்கம் பாசியை நம்பியிருக்கிறாள்' என்று நினைத்து அவன் முன்னேறிச் சென்றான்.செல்லட்டும் என்று முதலில் இருந்தவள், அவனுக்குத் தான் பின்னடைவானேன் என்று எண்ணித் தானும் சென்று பாசியை வாரினாள்.
போட்டியுணர்ச்சியால் ஃபார்ட்டி மேலும் மேலும் முன்னேறிச் சென்றான். தூங்கும் பாறையருகே அவன் நாட்டமும் சென்றது. காலடியும் மெல்ல அதை நோக்கி நகர்ந்தன.
அவள் மனித உள்ளம், உள்ளூரப் பெண்மை நலந் தோய்ந்த பெண்மையுள்ளம், அவளை அறியாமல் எச்சரிக்க முன் வந்தது.
"ஃபார்ட்டி! நீ அறியாச் சிறுபிள்ளை. அந்தத் தூங்கும் பாறையில் கால் வைக்காதே. அஃது ஆபத்து. அதிலும் இன்றைய புயல்.."
அவள்
எச்சரிக்கையை அவன்
எச்சரிக்கையாகக் கருதவில்லை. ஏளனமாக எண்ணினான். அவன் வேண்டுமென்றே துணிவுடன் தூங்கும் பாறையின் மறுகோடிவரை சென்று, அதில் நின்று பாசிகளை மலை மலையாக வாரிப் பாறையில் குவித்தான்.
இந்த நிலை வர வேண்டுமென்றுதான் அவள் விரும்பி இருந்தாள். ஆனால், வரும்போது அவள் மகிழவில்லை. அவன் அறியாத் துணிச்சல் கண்டு முதலில் கோபப்பட்டாள். பின் இரக்கப்பட்டாள். அவள் நெஞ்சு அவளையுமறியாமல் படபடத்தது.