பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 ||

அப்பாத்துரையம் - 36

அதன் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த பணியாள் ‘ஏன் கதவை வந்து தட்டுகிறாய், போ வெளியே!' என்று கடுகடுத்தான் 'திருவாட்டி ஃகன்லிஃவ்வைக் காண வேண்டும்' என்று அவள் கூறியதற்கும் இதைவிட மோசமான மறுமொழிதான் வந்தது. ஆகவே அவள் ஃபார்ட்டியின் நிலைபற்றிப் பணியாளிடமே கூற வேண்டியதாயிற்று. அது கேட்டதும் நிலைமை மாறிற்று. திருவாட்டி ஃகன்லிஃவ்வும் திரு. ஃகன்லிஃவ்வும் ஓடோடி வந்தனர். ஒரே அமளி குமளிப்பட்டது. விரைந்து உதவி யாளுடன் போக வேண்டும் என்று மாலி துடித்தாள். 'இந்நேரம் எப்படியிருப்பாரோ, உடன் ஆளனுப்பிப் பாருங்கள்' என்றாள்.

செய்தி கொண்டுவந்தவளைப் பற்றிக் கவலைப்

படுபவரோ கவனிப்பவரோ அங்கே யாரும் இல்லை. அவளுக்கு நன்றியாக ஒரு சொல் தெரிவிக்கக்கூட யாரும் கனவு காண வில்லை. ஏழையின் மனிதப் பண்பை யார் மதிப்பர்! அது மட்டுமன்று. அந்த உயிராபத்தான வேளையிலும் அவர்களுக்கு மாலியைக் குறுக்குக் கேள்விகள் கேட்க, அவள் மீது ஐயப்பட மனத்தில் இடமிருந்தது.

66

திருமதி ஃகன்லிஃவ் ஐயோ, அந்தக் கீழ்மக்களுடன் போட்டிக்குப் போக வேண்டாமென்றேனே, கேட்கவில்லையே! ஐயோ! கொன்று விட்டார்களே உன்னை!” என்று கதறினாள்.

யாரோ திரு.ஃகன்லிஃவ்வின் காதில் ஏதோ சொன்னார்கள். உடனே அவன் மாலியின் பக்கம் திரும்பி “கொன்றது நீயானால், பழிக்குப் பழி வாங்குவேன்; நினைவிருக்கட்டும்” என்றான்.

எந்த உயிரைக் காக்க அவள் தன் பழம்பகையை விடுத்துத் தன் உயிரையும் இடருக்குள்ளாக்கினாளோ, அந்த உயிரைத் தானே கொன்றதாக அவர்கள் முடிவு காணாமலே ஐயுறுவதை அவள் உணர்ந்தாள். பாட்டன் எண்ணியது தவறல்ல என்று கண்டாள்.

செல்வம் படைத்தோரின் நன்றிகெட்டதனத்தையும், உணர்ச்சியற்ற அன்பற்ற தன்மையையும் கண்டு அவள் மனம் கசந்தது.“அதையெல்லாம் சிந்திக்கலாம், பின்னால்! இப்போது மருத்துவரை அழைத்துக் கொண்டு போய், உயிர் மீட்க வழியுண்டா என்று பாருங்கள்” என்று கூறி வெறுப்புடன் தன் வழியே திரும்பி விரைந்தாள்.