சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5
213
ஒருவனும் அவன் புதல்வன் ஆமீன் ஆதாப் என்பவனும் மட்டும் இந்துஸ்தானத்துக்கு ஓடிச் சென்று பருகச்ச நகரில் தங்கினர். அங்கே அவர்கள் தம்மையே பாரசீக அரசன் என்றும் இளவரசன் என்றும் கூறிக் கொண்டு வாழ்ந்தனர். நகைச்சுவை மிக்க மன்னன் மசூக் இதைக் கேள்விப்பட்ட போது சினங் கொள்ளவில்லை. "கரும்புத் தோட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடட்டும். கரும்பை நான் சுவைக்குமட்டும் அதுபற்றி எனக்கு என்ன கவலை?" என்று கூறி அவன் நகைத்தான்.
மன்னன் மசூக்கின் நகைத்திறம் எப்போதும் ஒளி வீசுவதில்லை. அவன் எப்போதும் சுமூகமாயிருப்பதுமில்லை. இவ்விரண்டையும் பேணுவதில் அரண்மனை மருத்துவர், கடகவி, கதைவாணர், பாடகர் ஆகிய பலர் அரும்பாடு பட்டனர். அமைச்சன் அரசாங்கக் கடமைகளில் மிகக் கடினமான கடமையும் அதுதான்! ஆனால் அரசன் ஓயாது தின்ற இனிப்புப் பண்டங்களும் இனிய குடிவகைகளும் அவர்கள் முயற்சியை அடிக்கடி வீணாக்கின. மன்னன் அடிவயிற்றுச் செரிமானம் குறைந்தவுடன் நகைச்சுவைக்குப் பஞ்சம் உண்டாகிவிடும். அரண்மனை அல்லோல கல்லோலப் படும். அமைச்சனுக்குப் பொறுக்கமுடியாத தலையிடியும் அலைச்சலும் ஏற்படும்.
அரசன் உள்ளத்தில் கடுகடுப்பும் நேரம் போக மாட்டாத நிலையும் ஒருநாள் ஏற்பட்டது. அன்று விகடகவியை அவன் வேம்பென வெறுத்தான். கோமாளியைக் காண அவன் குமுறினான். கதைவாணர் வாய் திறக்க விடாமல் கடுகடுத்தான். அமைச்சனோ அணுக அஞ்சினான். அரசனுக்குப் புதிய பொழுதுபோக்குக்கான வழிதேடி அவன் புறப்பட்டான். நகரின் ஒரு பக்கத்தில் மக்கள் கும்பல் கூடி இரைந்து கொண்டிருந்ததை அவன் கண்டான். அவர்கள் நடுவே ஒரு கிழவி தமிழகத்தி லிருந்து கொண்டு வரப்பட்ட வகைவகையான வண்ணப் பொருள்களை விற்றுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் அமைச்சன் வாடிய முகத்தில் தெம்பு உண்டாயிற்று. 'ஆம்! அரசன் மனநிலையை மாற்றத்தக்க புதுமை இதில்தான் இருக்க வேண்டும்' என்று கருதியவனாய், அவளை அரசனிடம் இட்டுச் சென்றான்.