பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ||

அப்பாத்துரையம் 36

மன்னன், “நான் என் அமைச்சனுடன் அதுபற்றிப் பேசி பின் மறுமொழி கூறுகிறேன்” என்று அகன்றான்.

மன்னன் தனியிடம் சென்று அமைச்சனைப் பார்த்து, “ஆந்தை நங்கையிடம் எனக்கு இரக்கம் தோன்றிவிட்டது அதற்கு உதவி செய்ய வேண்டும்" என்றான்.

அமைச்சன், “அரசே! முன்னே ஒரு மாயக் கிழவியையும் மாய நாரையையும் கண்டு ஏமாந்து போனோம். இந்த மாய ஆந்தை கூறுவதை நம்பி ஏமாறக் கூடாது. மேலும் தாங்கள் போயும் போயும் இந்த அந்தசந்தம் கெட்ட ஆந்தையையா மணப்பது!” என்றது.

மன்னன், “அதெல்லாம் முடியாது. அந்த ஆந்தை இளவரசியை மணக்கத்தான் வேண்டும்" என்றது.

அமைச்சன், “சரி. தங்கள் விருப்பம் அதுவானால் அதன்படி நடக்கட்டும்.ஆந்தையை நீங்கள் மணந்து கொள்ளுங்கள் என்றான்.

மன்னன், “மணப்பது நானன்று; நீதான். நீ அதை அந்தசந்தம் கெட்டது என்றாய், நீ அந்தசந்தம் கெட்டவன் என்பதை மறந்து! நீதான் அதை மணக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறேன்” என்றான்.

அமைச்சன் மனக் கிளர்ச்சியில்லாமலே சரி என்றான்.

ஆனால், அவர் பேச்சுக்கிடையே ஆந்தை கடுஞ்சினத்துடன் அலறிற்று. "ஆகா, அரசே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய். நான் மணந்தால் ஓர் அரசனை மணப்பேன். இல்லாவிட்டால் இதோ..."

ஆந்தை கழுத்து முறிந்து விடுவதுபோல் பாவித்தது.

அரசன் ஓடோடி ஆந்தையைத் தாங்கி “உன்னை நான் மணப்பதாக உறுதி கூறுகிறேன். மனம் கலங்காதே!" என்றான்.

ஆந்தை மனமகிழ்ந்தது. ஆனால், அடுத்த கணம் அது கீழே விழுந்தது.

கீழே ஆந்தையைக் காணவில்லை. அழகான இளவரசி நின்றாள்.