சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
221
இளவரசி இப்போது நாரைகளை ஏறிட்டுப் பார்க்கக் கூடவில்லை. சரேலென்று நடந்தாள். நாரைகள் பின் தொடர்ந்தன.
பாரசீகம் கடந்து காடுமேடு நடந்து ளவரசி இந்துஸ்தானத்துக்குள் நுழைந்தாள்.
நாரைகளும் உடன்சென்று இந்துஸ்தானத்தின் எல்லை யில்லா அழகைக் கண்டு வியந்தன.
யமுனைக் கரையில் இளவரசி வந்து நின்று, ஆற்று நீரின் அழகைக் கண்டு பரவசப்பட்டு நின்றாள். அச்சமயம் ஆற்றில் ஓர் அழகிய பொன்படகு மிதந்து வந்தது. அதில் தாடி மீசையுடன் அழகிய அரசவை உடையில் ஒருவர் அரியணையில் வீற்றிருந்தார்.
அவரைக் கண்டதும் இளவரசி கைதட்டி, ‘அப்பா,அப்பா!' என்று கூவினாள்.
அவன் இந்துஸ்தானத்தின் அரசன்; அவன் படகைக் கரைப்பக்கம் செலுத்தினான். இளவரசி படகிலேறி மன்னனை அணைத்துக் கொண்டாள். மன்னனும் கண்ணீர்விட்டு, 'இத்தனை நாளும் எங்கே சென்றிருந்தாய் என் கண்மணி!' என்று கலங்கினான்.
நாரைகள் இளவரசியை விடாது பின் தொடர்ந்தன. படகோட்டி அவற்றை விரட்ட எண்ணி எண்ணி ஒரு கழியை எறிந்தான்.
அமைச்ச நாரையின் ஒரு கால் முறிந்தது. ஆயினும் நாரைகள் படகிலேயே வந்து ஒண்டிக் கொண்டன. அரச நாரை அச்சமயம் தன் மனித மொழியையும் அரச பதவியையும் பயன்படுத்தி “இந்துஸ்தானத்தின் அரசனான என் சோதரரே! வணக்கம்!” என்றது.
நாரை பேசுவதைக் கேட்டு இந்துஸ்தானத்து மன்னன் மலைத்தான். ஆனால், அதே சமயம் ஒரு நாரை தன்னுடன் சமத்துவ தோரணையில் உரையாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவன் படகை விரைந்து ஓட்டும்படி படகோட்டிக்குக் கட்டளையிட்டான்.