28. பேராவல் பெண்டு
ஜெர்மன் நாட்டுக் கதை
கோழிக் கூடு போன்ற ஒரு சிறு குடிசையில் ஒரு செம்படவனும் அவன் மனைவியும் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் செம்படவன் வெளியே சென்று மீன் பிடிப்பான். அவன் மீன் கொண்டு வந்தாலும் கொண்டு வருவான். கொண்டு வராவிட்டாலும் கொண்டு வராமலிருப்பான். அவர்கள் இரவு ஏதேனும் சாப்பிட்டாலும் சாப்பிடுவார்கள். சாப்பிடாமல் இருந்தாலும் இருப்பார்கள். செம்படவன் மனைவி அப்போ தெல்லாம் வந்ததை வரவேற்று வேறு எதுவும் விரும்பாமல் காலங்கழித்தாள்.
ஒருநாள் செம்படவன் கடலோரத்தில் தூண்டிலிட்டு, மீனுக்காகக் காத்திருந்தான். கடலில் எத்தனையோ மீன்கள் இருக்கலாம். அவன் தூண்டிலை எந்த மீனும் அன்று கவனிக்க
வில்லை.
மாலைநேரம். வழக்கத்திற்கு மாறாகக் கடல் செக்கச் செவேலென்று ஒளி வீசிற்று. அச்சமயம் தூண்டில் சட்டென்று அவன் கையிலிருந்து நழுவிற்று. அது வேகமாகக் கடலுக்குள் சென்றது. ‘அது மிகப் பெரிய மீனாகத்தான் இருக்க வேண்டும்' தூண்டிலையே இழுத்துக்கொண்டு போவதற்கு, என்று எண்ணி அவன் அதைத் தன் வலுக்கொண்ட மட்டும் பிடித்து இழுத்தான்.
அவன் எதிர்பார்த்தபடியே அது ஒரு பெரிய மீனாகத்தான் இருந்தது. ஆனால், அது அவனிடம் மனித குரலிலேயே பேசிற்று. "அன்பனே, அருள் கூர்ந்து என்னை விட்டுவிடு.நான் மாயத்தால் மீனுருவாக மாற்றப்பட்ட ஓர் இளவரசன்,” என்றது.செம்படவன் மீனை விட்டுவிட்டான்.