பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. நான்கு புதிர்கள்

சாயம் நாட்டுக்கதை

பண்டைக் காலத்தில் வயதில் இளைஞனான ஓர் அரசன் இருந்தான். அவன் எப்போதும் இன்ப வாழ்விலேயே மூழ்கி இருந்தான். இதனால் அரசியல் வாழ்வில் பல தொல்லைகள் ஏற்பட்டன. அரசன் எதிர்பார்த்தபடி கவலை யில்லாமல் இன்பம் துய்க்க முடியவில்லை. இன்பம் நாடிய இடமெல்லாம் துன்பமும் கவலையும் பெருகின.

ஒருநாள் அரசன் தலைநகரிலிருந்து சற்றுத் தொலைவி லுள்ள காட்டில் வேட்டையாடச் சென்றான். வழியில் ஒரு விறகு வெட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்தான்.

அருகே அவன் மனைவி வெட்டிய விறகை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். இருவர் முகத்திலும் மகிழ்ச்சி நடமாடிற்று. கவலையின் சிறு தூசுகூட இருவர் முகத்திலும் இல்லை.

"எவ்வளவோ செல்வமும் வாய்ப்பு நலங்களும் இருந்தும் நமக்குக் கவலை இல்லா இன்பம் கிட்டவில்லை. இந்த ஏழை விறகுவெட்டிக்கு அது எப்படி எளிதாகக் கிட்டிற்று. இதைக் கேட்டறிய வேண்டும்,” என்று அரசன் எண்ணினான். அவனை அணுகி அரசன் பேச்சுக் கொடுத்தான்.

அரசன்: அன்பனே, உனக்கு எப்படி இவ்வளவு இன்பமாகக் கவலையில்லாமல் வாழ முடிகிறது?

விறகுவெட்டி: நானும் என் மனைவியும் விறகு வெட்டி விற்கிறோம், இதில் வருகிற வருவாய் எங்களுக்குப் போதியதாக இருக்கிறது. ஆகவே, நாங்கள் இன்பமாகக் காலங் கழிக்கிறோம்.