சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
[247
பரிசளிப்பதாகப் பறை சாற்றுவித்தான். மாதங்கள் பல சென்றன. யாராலும் புதிர்களுக்கு விடையளிக்க முடியவில்லை.
விறகுவெட்டியின் மனைவியின் காதுக்கு இச்செய்தி தெரியவந்தது. புதிர்கள், கணவன் அரசனிடம் சொன்ன புதிர்களே என்பதை அவள் அறிந்தாள். கணவன் அவற்றைத் தனியாகச் சென்று அரசனுக்கு விளக்கியதையும், அவற்றை யாருக்கும் வெளியிடக்கூடாது என்று அரசன் கண்டிப்பாகக் கூறியதையும் அவள் நேரடியாகக் கேட்டிருந்தாள்.
அரசன் பரிசுச்செய்தி தெரிவதற்கு முன்பே அவள் கணவனிடம் பசப்பிப்பேசி, தான் யாரிடமும் கூறுவதில்லை என்ற உறுதியுடன் அந்த விளக்கங்களைக் கேட்டறிந்திருந்தாள்.
விளக்கங்களை இப்போது அரசனிடம் கூறி அந்தப் பரிசைப் பெறலாம் என்ற ஆவல் ஒருபுறம் அவளை வாட்டிற்று. அதைக் கணவன் தன்னிடம் சொல்லிவிட்டதறிந்தால் அவன் தலை போய் விடுமே என்றும் அவள் தனக்குள்ளாகக் கவலைப்பட்டாள். ஆயினும் இறுதியில் பண ஆவல் கணவன் உயிர்பற்றிய எண்ணத்தை வென்றது.
அவள் அரசனிடம் சென்று புதிர்களுக்குச் சரியான விளக்கங்கள் தந்தாள்.
அரசன் தான் பறைசாற்றியிருந்தபடி அவளுக்குப் பரிசில் தந்தான்.
அவள் போகுமுன் அரசன் அவளைக் கூர்ந்து கவனித்தான். அரசன்: உன்னை எங்கோ இதற்குமுன் பார்த்திருக் கிறேனல்லவா?
விறகுவெட்டியின் மனைவி: ஆம், அரசே. நீங்கள் காட்டில் சந்தித்த விறகுவெட்டியின் மனைவி நான்.
அரசன்: புதிர்களுக்கான விளக்கம் உனக்கு எப்படித் தெரிந்தது?
விறகுவெட்டியின் மனைவி: என் கணவரிடமிருந்து அறிந்தேன், அரசே!
மன்னன் உடனே விறகு வெட்டியை வரவழைத்தான்.