33. கற்சிங்கம்
திபெத் நாட்டுக்கதை
செழிப்பான ஒரு பள்ளத்தாக்கில் இரண்டு உடன் பிறந்தார்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் தந்தை இல்லை. தளர்ந்த வயதுடைய தாய்தான் இருந்தாள்.
அண்ணன் மிகவும் நல்ல உழைப்பாளி. திறமையும் உடையவன். ஆனால் அவன் குறுகிய தன்னலம் உடைய வனாகவும், மிகுந்த பண ஆவலுடையவனாகவும் இருந்தான். தம்பி இதற்கு நேர்மாறாக அண்ணனிடமும் தாயிடமும் பாசம் உடையவனாயிருந்தான். ஆனால், அவனால் அண்ணனளவு உழைக்கவும் முடியவில்லை. அவனைப் போலத் திறமையுடன் பணம் திரட்டவும் முடியவில்லை.
தன் பணத்தில் தாய் மட்டுமல்லாமல் தம்பியும் பங்கு கொண்டு வாழ்கிறானே என்று அண்ணன் மனத்துக்குள் குறு குறுத்தான். ஒருநாள் அவன் தம்பியை அழைத்தான். “என்னால் இனி உன்னை வைத்துக் காப்பாற்ற முடியாது. நீ எங்காவது போய், உன் உழைப்பைக் கொண்டே வாழத் தொடங்கு” என்றான்.
அண்ணன் சொன்னது சரி என்றுதான் தம்பி நினைத்தான். ஆனால், அண்ணனையும் தாயையும் விட்டுப்பிரிய அவனுக்கு வருத்தமாயிருந்தது. அண்ணன் தன்னிடம் இவ்வளவு கண்டிப்பாகவும் கடுமையாகவும் இருப்பான் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
வேறு வழியில்லாமல் அவன் வீட்டைவிட்டு வெளியே போகப் புறப்பட்டான். தாயிடம் சென்று செய்தியைச் சொல்லி, "போய் வருகிறேன், அம்மா!” என்றான்.
வயது சென்ற தாய் இதைக் கேட்டு மனவருத்தம் அடைந்தாள். “தம்பியைப் போகச் சொல்லாதே,” என்று அவள்