சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
66
281
“அக்காமாரி, அக்காமாரி! இந்தக் குழந்தைகளை நீ உயிரைவிட மேலாக நேசிக்கிறாய் அல்லவா?” என்றது.
“ஆம் அதற்கென்ன!” என்றாள் அவள்.
“உனக்கு நான் இப்போது ஒரு இக்கட்டான புதிர் போடப் போகிறேன். இறந்துவிட்ட உன் அண்ணன்மார் உயிர் உனக்குப் பெரிதா? புதிதாக வந்த இந்த உயிர்கள் பெரிதா? உனக்கு எது முக்கியமோ, அது கிடைக்க நான் வழிசெய்ய முடியும்!” என்றது.
மன்னனும் தான் தெரியாத்தனத்தால் அவர்களைக் கொன்று விட்டதறிந்து வருந்தினான். அரசியின் கருத்துச் சரியே என்று அவனும் கூறினான்.
தம்பிநாகன் குழந்தைகள் இரண்டின் கழுத்தையும் முறித்தது. பின் அரசனையும் அரசியையும் கோட்டைக்கு வெளியே இட்டுக் கொண்டு சென்றது. அங்கே மாரிகிதாவின் அண்ணன்மார் உடல்கள் கிடந்தன. அரசனையும் அரசியையும் கண்டதும் பிணங்களாகக் கிடந்த அண்ணன் மார்கள் உயிர்பெற்றெழுந்து தங்கையையும் அரசனையும் கண்டு மகிழ்ந்தனர்.
முதல் மகிழ்ச்சியும் ஒருவரொருவர் நல உசாவலும் கழிந்தன. அண்ணன்மார் தங்கையிடம், “உனக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?” என்றார்கள். அவள் அழுதாள். தம்பி நாகன் அவளையும் அவர்களையும் அழைத்துக் கொண்டு அரண்மனை வந்தது. குழந்தைகள் முன்போலவே புன்முறுவ லுடன் கிடந்தன. மாரிகிதா அவற்றை எடுத்து முத்தமிட்டாள். "தம்பி நாகா, நீ ஒரு தெய்வம்," என்றாள்.
“ஆம் நான் ஒரு தெய்வம்தான். உன் தாய் இறக்கும்போது என்னை வணங்கி, என்னிடம் உன்னை ஒப்படைத்தாள்; நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன். இனி நீ நீடுவாழ்க!” என்று கூறி மறைந்தது.