37. மகீமன்ஃசார்
பாரசீக நாட்டுக் கதை
உரூம் நகரின் பேரரசனுக்கு மகீமன்ஃசார் என்ற அழகிற்சிறந்த புதல்வி ஒருத்தி இருந்தாள். அழகிற் சிறந்திருந்ததுபோலவே, குணத்திலும் அறிவிலும் அவள் ஒப்புயர்வற்றவளாயிருந்தாள். எனவே அவளைப் போற்றிப் புகழாதவர் அந்த நாட்டில் இல்லை.
அதே நகரில் கொலை, களவு, பொய், சூது, குடி ஆகிய ஐம்பெரும் பழிகளும் செய்து எல்லோரின் வெறுப்புக்கும் ஆளாயிருந்த அக்தார் என்ற ஓர் இளைஞனும் வாழ்ந்தான். அவன் கடை அரண்மனைக்கு அருகாமையிலேயே இருந்தது.
ஒருநாள் மாலைப்பொழுதில் மகீமன்ஃசார் அரண்மனை மாடியில்வந்து இளந்தென்றலில் உலவிக் கொண்டிருந்தாள். அதேசமயம் தன் கடையின் மேல் மாடியில் அக்தாரும் தற்செயலாக நின்றிருந்தான். மாசற்ற முழு நிறைமதியம் போன்ற இளவரசியின் அழகு, இழிமகனான அக்தாரின் கண்ணை உறுத்தி உள்ளத்தை வடுப்படுத்திற்று. எல்லோரும் அவள் அழகைவிடக் குணத்தையும் அறிவையும் புகழ்ந்தது அவன் மனப்புழுக்கத்தை இன்னும் மிகுதிப்படுத்திற்று.எட்டாக்கனியாகிய அவ்விளரவசியை எப்படியாவது கைப்பற்றி அடக்கியாள வேண்டுமென்ற தகா எண்ணம் அவன் நஞ்சார்ந்த நெஞ்சில் எழுந்தது.
மகீமன்ஃசாரின் புகழைத் தம் வாழ்வுடன் பிணைக்க ஆர்வங்கொண்ட மன்னரும் மன்னிளங்கோக்களும் எண்ணற்றவர். ஆனால், அவர்களில் அவள் உள்ளத்தையும் தாய் தந்தையர் இணக்கத்தையும் பெறும்பேறு, தஃப்ரீஃக ளவரசன் மீர்