302
அப்பாத்துரையம் - 36
அசாருக்கே கிட்டிற்று. அவன் உரூம் நகர்வந்து அவளை மணம்புரிந்து இட்டுச்செல்ல இருந்தான்.
இச்செய்தி அக்தாருக்கு எட்டிற்று.
தகுதியுடையவன் உரிமையுடன் கொண்டு போகுமுன், தன் தகா எண்ணத்தை நிறைவேற்ற அக்தார் துடித்தான்.
ஒவ்வொரு நாளும் இரவில் அவன் அரண்மனைப் பக்கம் சென்றான்.காவலர்கள் விழிப்பாகக் காவல் காத்து வந்ததுகண்டு, அவன் மனமுடைந்து திரும்ப வேண்டியதாயிற்று.
மீர் அசார் புடையர்குழுச்சூழ அரண்மனை வந்து சேர்ந்தான். அரண்மனையில் விருந்துகளும் கேளிக்கைகளும் நிரம்பின. நகரமக்கள் யாவரும் விழாக் கொண்டாடினர். இளவரசனுக்கும் இளவரசிக்கும் மண உறுதி செய்யப்பட்டது.
விருந்தயர்வால் அன்றிரவு காவலர் முன்னிரவிலேயே தூங்கி விழலாயினர். காவற்பெண்டிரும் அயர்வுற்றிருந்தனர். இதுதான் சமயமென்று அக்தார் வரிக்கயிறுகளுடன் அரண்மனை நோக்கிச் சென்றான். குரட்டை விட்டுக் கொண்டிருந்த காவலரைத் தாண்டிக் கயிற்றை சுண்டியிட்டு மாடிமீது வீசினான். அது மாடியிலிருந்த கைபிடிச்சுவரின் குமிழ்களில் மாட்டிக் கொண்டது.அவன் அதைப்பற்றி ஏறினான்.
காற்றுக்காக இளவரசியின் அறையின் பலகணிகள் மட்டுமல்லாமல் வாயில் கதவும் திறந்துவைக்கப்பட்டிருந்தது. வழியில் உறங்கிய காவற் பெண்டிரை அவன் தாண்டிச் சென்றான்.
உ
இளவரசி அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அக்தார் தான் கொண்டுவந்த மயக்க மருந்தை அவள் மூக்கிற்கெதிராகப் பிடித்தான். அவள் முற்றிலும் உணர்விழந்தாள். மருந்தின் ஆற்றல் தளரப் பல மணிநேரம் பிடிக்குமென்பது அவனுக்குத் தெரியுமாதலால், அவன் அவளை மெல்லத் தூக்கிக்கொண்டு கயிற்றின் உதவியால் கீழே இறக்கினான். பின் தானும் இறங்கி அவளைத் தோளில் சுமந்தவண்ணம் நகரைவிட்டு ஓடினான்.
இளவரசி மகீமன்ஃசாருக்கு மீண்டும் உணர்வு வரும்போது, அவள் காட்டுவழியின் அருகே நிலத்தில் கிடந்தாள். அக்தார் அவள் அருகே உட்கார்ந்திருந்தான்.