பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

303

கண்விழித்தவுடன் அவள் வழக்கப்படி தன் தோழியர்களை அழைத்தாள். யாரும் வராததையும் தான் இருக்கும் இடம் காடாயிருப்பதையும் கண்டு 'எங்கிருக்கிறேன் நான்' என்று அவள் திகில் கொண்டாள். அப்போது அக்தார் அவள்முன் நின்று, “அஞ்சாதே இளவரசியே! உன்னை மனமாரக் காதலிக்கும் என்னிடமே நீ இருக்கிறாய்! ஆகவே அஞ்சவேண்டாம்,” என்றான்.

"பெண்ணரசி, அழகாரணங்கே! நான்தான் அக்தார். உன் அரண்மனையடுத்த மாடியிலிருந்து நான் உன்னை ஒருநாள் பார்த்தது உனக்கு நினைவிலிருக்கலாம். அன்று முதல் நீ என் உள்ளத்தைவிட்டு அகலவில்லை. ஆயினும் நான் எத்தனையோ தடவை முயன்றும், உன்னை அணுகமுடியவில்லை. இன்று தெய்வம் எனக்கு உதவிற்று. உன்னை நான் என் கண்ணாக வைத்துக் காப்பேன். நீ கவலைப்பட வேண்டாம்,” என்றான்.

இச்செய்தி கேட்டு இளவரசியின் உடலின் ஒவ்வோரணுவும் திடுக்குற்றது.எனினும் ஆரிடர்நேர்ந்த இடத்தில்தான் அஞ்சாமை வேண்டும் என்பதை அறிவார்ந்த அந்த அணங்குநல்லாள் அறிந்திருந்தாள். விழுந்த பொறியிலிருந்து மீள வகைகாணு மளவும் அவன் நம்பும்படி நடிப்பதே நன்றென அவள் தேர்ந்து கொண்டாள்.

"அழகுமிக்க இளைஞனே! நானும் உன்னை அன்று கண்டவுடனேயே காதலித்துவிட்டேன். ஆனால், உன்னை நான் இவ்வளவு எளிதில் அடைவேன் என்ற நம்பிக்கை இல்லாதிருந்தது. நீ அழகுடையவன் மட்டுமல்ல, திறமையும் உடையவன். ஆகவே நாம் இவ்வாறு காட்டில் அலைய வேண்டியதில்லை. ஏதேனும் ஒரு நகரத்தில் சென்று வீடு அமர்த்திக் கொண்டு வாழலாம் விரைந்து போவோம்,” என்றாள்.

அக்தார் இத்திட்டத்தை மனமுவந்து ஏற்றான்.

"நாட்டில் போய்ச் சேரும்வரை பெண் உருவில் நான் வருவது எப்படியும் இடையூறு தரும். என்னையும் ஆணாக உருமாற்றிவிட்டால் நல்லதல்லவா?" என்றாள் இளவரசி.

மீண்டும்!