பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5

29

நளினியைக் காதலித்த கோமகன் ஆகவமல்லனிடம் பணம் இருந்தால் நளினியின் காதலை எண்ணி அவன் பணங்கொடுத்து உதவி இருப்பான். ஆனால் அவனிடமும் பணமில்லை. நளினியை அடைய விரும்பிய வழக்கு மன்றத் தலைவன் கோதண்டன் அவளைத் தனக்கு மணம் செய்து கொடுப்பதாயின் அப்பொருளைக் கொடுத்து உதவுவதாகக் கூறினான். புதல்வனையும் காணப் பெறாமல், நிலத்தையும் இழக்க மனமின்றி விசயப்பெருந்தகை மனம் வருந்திச் செய்வதறியாது திகைத்தான்.

கோதண்டன், இளவரசன் விசயனுக்கு உடந்தையானவன். ஆகவே கோமகன் ஆகவமல்லன் இருக்குமளவும் நளினி தன் பக்கம் திரும்பமாட்டாள் என்று எண்ணினான். ஆகவே அவன் ஆகவமல்லன் அரசனுக்குரிய தனிக்காட்டில் நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டி அவனை நாடுகடத்தும்படி இளவரசனைத் தூண்டினான். ஆகவமல்லன் நாடு கடத்தப்பட்டுத் தன் நிலங்களை இழந்த பின், தன் நெருங்கிய நண்பராகிய மலையன், மானவன், (உண்மையில் மிகவும் நெட்டையாயிருந்த) குட்டை மாணிக்கம் ஆகியவருடன் வேனிக் காட்டையடைந்தான்.போர் வீரமும் உள நேர்மையும் உடைய அவர்கள் காட்டு வழிப் போக்கர்களில் கோதண்டன் போன்ற கொடிய கொடாக் கண்டராகிய செல்வரைக் கொள்ளையடித்தும், ஏழைகளுக்கும் துணையற்றவர்களுக்கும் துணைபுரிந்தும் நாட்டரசராய்ப் புகழுடன் வாழ்ந்து வந்தனர்.

மல்லர்கோ

ஆகவமல்லனின் புகழைக் கேட்டுச் சில நாட்களில் இளவரசன் விசயனின் கீழிருக்கப் பிடிக்காத பலர் வேனிக் காட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுள் சிலம்பப்போரில் வல்லவரும் துறவியுமாகிய மதங்க அடிகள் ஒருவர். ஆகவமல்லன் தன் உருவை மாற்றிக் கொண்டு மல்லர்கோ என்ற புனை பெயருடன் அவர்களைக் குரங்குப் போர் முறைகளில் பயிற்றுவித்தான். குழல் ஒன்றை ஊதியதும் அவர்களனைவரும் குன்றுகளிலிருந்தும் புதர்களிலிருந்தும் அவனிடம் வந்து சேருமாறும் ஏற்பாடு செய்திருந்தான்.