6. ரேஸாராபும் ரஸ்டமும்
தஃமீனாவும் ரஸ்டமும்
ரஸ்டம் என்பவன் பாரசீக நாட்டின் ஒப்பற்ற வீரன் அவன் சென்ற இடமெல்லாம் வெற்றியே வந்தது. அவன் புகழ், பாரசீக நாட்டில் மட்டுமின்றி உலக முற்றும் பரந்தது.
அவன் குதிரை ரஷ் என்பது. அதுவும் அவனைப் போலவே புகழ்மிக்கது.
ஒரு நாள் ரஸ்டம் பல இடங்களுக்கும் சென்று தார்த்தாரிய நாட்டின் பக்கம் வரும்போது, களைப்படைந்து ஓரிடத்தில் படுத்துறங்கினான்.
வேட்டையாட வந்த குரடநாட்டுச் சிற்றரசன் அவனை இனங் கண்டு அழைத்துப்போய்த் தன் அரண்மனையில் தங்கி விருந்துண்ணும்படி வேண்டினான். அங்ஙனமே அவன் அங்கே தங்கினான். அரண்மனையிலுள்ளோரும் ஊராரும் உலகறிந்த வீரனாகிய அவனை வந்து பார்த்துப்போயினர்.
அரசன் புதல்வியாகிய தஃமீனா அப்பொழுது கன்னி மாடத்திலிருந்தாள். அவளுக்கும் ரஸ்டத்தைப் பார்க்க வேண்டுமென்ற அவா இருந்தது. இளமங்கையாதலின், நேரில்
செல்லக் கூசி விடியற் காலையில் அவன் எழுமுன்
படுக்கையிலேயே அவனைக் காண எண்ணினாள். அதன்படி பந்தமேந்திய ஓர் அடிமையின் துணையுடன் வந்து அவனைக் கண்டாள்.
அப்போதே விழித்துக் கொண்ட ரஸ்டம், அழகின் இளஞாயிறு எழுந்ததென்னும்படி ஒளி வீசிய அந்நங்கையைக் கண்குளிர நோக்கி, அவளை யாரென உசாவி அறிந்து கொண்டான். அது முதல் மனம் அவளையே நாடியதாகலின்,