பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

43

அரசனிடம் சென்று அவளைத் தனக்கு மணஞ்செய்விக்க வேண்டினான்.பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் கிடைத்தற் கரிய வீரன் தானாக விரும்பித் தன் பெண்ணை வேண்டியது கண்டு மகிழ்ந்து, அரசன் விருப்புடன் தஃமீனாவை ரஸ்டத்துக்கு மணஞ்செய்து கொடுத்தான்.

ரஸ்டம், தஃமீனாவுடன் தாத்தாரிய நாட்டிலேயே சில காலம் தங்கியிருந்தான். இயற்கையிலேயே போரை நாடிய அவன், அங்கேயே மகிழ்ந்திருக்க முடியவில்லை. ஆகவே மனைவியிடமும் மாமனிடமும் விடை பெற்று கொண்டு தன் நாடு சென்றான்.

தஃமீனாவின் குழந்தை

அப்போது தஃமீனாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.அது ஆண்குழந்தை என்று கேள்விப்பட்டால், அவனை ரஸ்டம் இளமையிலேயே போர் வீரனாக்கித் தன்னை விட்டுப் பிரியும்படி செய்துவிடுவான் என்று அவள் நினைத்தாள். ஆகவே, அவள் அது “பெண்,” என்று அவனிடம் சொல்லியனுப்பினாள். வீரனாகிய ரஸ்டம், “தனக்கு வீரமகன் பிறவாது, கேவலம் பெண் குழந்தை பிறந்து விட்டதே,” என்று வருந்தி அவ்வருத்தத்தில் மனைவியிடமும் வெறுப்புற்றுத் தனி வாழ்வு வாழலானான்.

ரஸ்டத்தின் தனி வாழ்வு

இங்ஙனம் ரஸ்டம் தனி வாழ்வு வாழ நேர்ந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. பல தலைமுறைகளாக ரஸ்டமும் அவன் தந்தையாகிய ஸாலும், மற்ற முன்னோர்களும் பாரசீக நாட்டின் தூண்கள் போல் நின்று, பகைவர்களிடமிருந்து அந்நாட்டினையும், நாட்டின் அரச குடும்பத்தையும் காத்து வந்திருந்தனர். அதற்கேற்ப ஆசனவ நகரிலும், அவன் குடும்பத்தினரே முதலிடமும் செல்வாக்கும் உடையவராயிருந்தனர். ஆனால், நாளடைவில் ரஸ்டத்தின் பெயர் கேட்டே நடுநடுங்கிய பகைவர்; பாரசீக நாட்டின் எல்லைப் பக்கத்தைக்கூடக் கனவிலும் நாடாதிருந்தனர். நாட்டில் அமைதி குடி கொண்டது.வாணிகமும் கலையும் வளர்ந்தன. செல்வரும் நாகரிக மக்களும் ஆசனவ நகரில் உயர் இடம் பெற்றனர். பழம் போர் வீரனான ரஸ்டத்தையும், அவன் அருமையையும், மக்கள், சிறப்பாக இளைஞர் மறந்துவிட்டனர். இதனாலும், ரஸ்டம் மனம் நொந்தான்.