10. கெரெய்ன்டின் திருமணம்
பிரிட்டனின் அரசராகிய ஆர்தரின் அரண்மனை வேடர் சிலர், காட்டில் மிகப் பெரியதும் பால் நிறமுடையதுமாகிய ஒரு மானைக் கண்டதாக வந்துரைத்தார்கள். கினிவீயர் அரசிக்கு எப்படியும் அம் மானைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்ற அவா ஏற்பட்டது. உடனே அவள் தன் சேடியருடனும் வேடருடனும் காட்டுக்கு வேட்டையாடப் புறப்பட்டாள். டெவன் வட்டத்தைச் சார்ந்த புகழ்பெற்ற வீரனாகிய கெரெய்ன்டும் உடன் சென்றான்.
நெடுநேரம் காட்டிலலைந்து பார்த்தும் மான் அவர்கள் கையிற் படாமல் மறைந்துவிட்டது. உச்சி வேளையானதும், இனி வேட்டையாட னி முடியாதென்று அவர்கள் ஒரு மரத்தடியில் வந்து இளைப்பாறியிருந்தனர். அப்போது அப்பக்கமாக ஒரு மங்கையும், அவளைப் பின்பற்றி ஒரு வீரனும், அவர்கள் பணிப்பையனாகிய குள்ளன் ஒருவனும் விரைவாகச் சென்றனர். அவ்வீரன் யார் என்று அறிந்து வரும்படி அரசி, தன் சேடியருள் ஒருத்தியை அனுப்பினாள். அவர்கள் சற்றும் அச்சேடியைப் பொருட்படுத்தாது உரையாடிச் சென்றனர். அது மட்டுமின்றி வீரன் துடுக்குத்தனமாகத் தன் சாட்டையால் தோழியை ஓங்கி அடித்துவிட்டுச் சென்றான்.
கெரெய்ன்டு இதனைக் கண்டதும், மிகவும் சினங் கொண்டு அவர்களிருப்பிடத்தையறிந்து “அவர்களுக்குச் சரியான தண்டனை கொடுத்து வருகிறேன்," என்று புறப்பட்டான்.
கெரெய்ன்டு நெடுந்தொலைவு அவர்களைப் பின்பற்றிச் சென்று இறுதியில் ஒரு நகரையடுத்துக் காணப்பட்ட ஒரு பெருங் கோட்டையில் அவர்கள் நுழைவதைக் கண்டான். வாயில் காப்போன் அவனைக் கோட்டையினுள் நுழைய