72
அப்பாத்துரையம் - 36
கெரெய்ன்டிடம் அப்போது போரிடுவதற்கான கவசமும் போர்க் கருவிகளும் இல்லை. அவை தனக்குக் கிடைத்தால், தானே சென்று அவன் கொட்டத்தை அடக்க விரும்புவதாகக் கூறினான். முதியவனாகிய பழங்கோட்டை வீரன் தன் துருப்பிடித்த கவசத்தையும் கருவிகளையும் வேண்டுமானால் தருகிறேன்,' என்றான். போரிடுபவர், அக்காலத்தில், தாம் தம் தலைவியாக ஒரு மங்கையை முன்னிட்டுப் போரிடுவது வழக்கம். போரில் வெற்றி பெற்றால் அவள் அவனுக்கு மாலையிட்டு, அவனையே கணவனாகக் கொள்வாள். கெரெய்ன்ட் முதிய வீரன் புதல்வியையே தலைவியாகக் கொள்ள எண்ணினான். பெற்றோரும் அதற்கிசைந்தனர்.
மறுநாள் விழாவுக்கான கேளிக்கைகள் தொடங்கு முன் கெரெய்ன்டு, பருந்து வீரன் முன் சென்று அவனைப் போருக்கழைத்தான். அப்போது போரில் தோற்றால் ஆர்தர் அரசனிடம் பெற்ற விருதுகளை விட்டுக் கொடுப்பதாகவும், வென்றால் தன் தலைவியாகிய பழைய வீரன் புதல்விக்கு, அவள் தந்தையிடம் கொள்ளையிட்ட பொருள்கள் யாவும் கொடுபட வேண்டுமென்றும் அவன் உறுதி கோரினான். பருந்து வீரன் இறுமாப்புடன் எதிருறுதி கூறவே மற்போர் தொடங்கிற்று.
இருவீரரும் முதலில் குதிரைகள் மீதிருந்தும், பின் ஈட்டி கேடயங்களாலும், இறுதியில் வாளாலும் போர் புரிந்தனர். மூன்றிலும் பருந்து வீரன் தோற்றுவிடவே, அவன் கொட்டமும் அவன் தலைவியாகிய மங்கையின் கொட்டமும் அடங்கின. பழைய வீரன் வசம் அவன் செல்வங்கள் யாவும் வந்தன.
கெரெய்ன்டு மறுநாளே தலைநகராகிய காமிலட் சென்று பழைய வீரன் மகளாகிய எனிடை மணக்க விரும்பினான். எனின் தாய் அவளை மணப்பெண்ணுக்கான ஆடையணி வித்தாள். ஆனால், கெரெய்ன்டு, தான் அவளை, அவள் பழைய கந்தையாடையுடனேயே கொண்டு செல்வதாகக் கூறினான். சற்று மனச்சோர்வுடன் எனிட் தன் புத்தாடைகளைத் துறந்து கந்தையாடையுடன் புறப்பட்டாள்.
காமிலட்டில் ஓரிரவுதான் எனிட் கந்தையாடையுடன் படுத்திருந்தாள். கினிவீயர் அரசியின் சேடியர் இரவோடிரவே அவளையறியாது அவளுக்கு, அரசியருக்கும் கிட்டாத வெண்பட்டாடையுடுத்திப் பொன்னும் மணியும் பூட்டினர்.