11. கெரெய்ன்டின் ஐயப்பேய்
டெவன் வட்டத்து வீரனான கெரெய்ன்டு ஆர்தர் வட்ட மேடையிலுள்ள நூறு வீரருள் ஒருவனாய்ச் சிறக்க வாழ்ந்து வந்தான். அவன் வெற்றிகளுக்கு அறிகுறியாக வந்த திருமகள் அருள் போன்ற அவன் மனைவி எனிட், கினிவீயர் அரசியின் நட்புக்குரிய தோழியாய் அவளுடன் அளவளாவியிருந்தனர்.
கினிவீயர் அரசிபுற அழகில் ஒப்பற்றவளாயினும், உலகின் ஒப்பற்ற வீர அரசன் தலைவியாயினும், அகத் தூய்மையற்றவள் என்று எங்கும் கூறப்பட்டு வந்தது. அதனைச் செவியுற்ற கெரெய்ன்டு தன் மனைவியின் கறையற்ற உள்ளம் அவளுறவால் மாசடைந்து விடுமே என்று கவலை கொண்டான். ஆயினும், அதனை வெளிக்காட்டாமல், வேறு சாக்குப் போக்குச் சொல்லி மனைவியைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு தன் நாட்டுக்குச் சென்றுவிட எண்ணினான்.
ஆர்தர் அரசரானது முதல் அவர் பிரிட்டனெங்குமுள்ள தீயோர், திருடர், கொடுங்கோலராம் குறுநில மன்னர் ஆகிய அனைவரையும் அடக்கி எங்கும் அமைதியும் நல்வாழ்வும் நிலவச் செய்திருந்தார்.ஆனால் டெவன் வட்டத்திலுள்ள காடுகளிடையே இன்னும் பல கொடியோர் இருந்து ஏழை மக்களையும் குடிகளையும் வருத்தி வந்தனர். அரசியலின் பல நெருக்கடி வேலைகளுக்கிடையே அங்கே போக அவருக்கு நேரமில்லை.
இவற்றை அறிந்து கெரெய்ன்டு அவரிடம் சென்று அரசே! தம் நகரில் தம் மருகன் போன்று கவலையின்றி நெடுநாள் வாழ்ந்துவிட்டேன். என் நாட்டைச் சுற்றி கொடுங்கோன்மையும் தீமையும் தலைவிரித்தாடுகையில் நான் இங்கே வாளா இருத்தல் தகாது! தம் புகழொளியை அங்கேயுஞ் சென்று பரப்ப மனங் கொண்டேன். விடை தருக!” என்றான்.