சேக்சுபியர் கதைகள் - 1
81
புதிய ஏவலாள் தன் பழைய தலைவனாகிய லியரிடம் அன்பும் நன்றியும் செலுத்துவதற்குரிய வாய்ப்பு விரைவில் நேர்ந்தது. கானெரில் அரண்மனை ஏவலாள் ஒருவன் அன்று லியரிடம் மதிப்பற்ற முறையில் நடந்து கொண்டான்; அவன் பேச்சும் பார்வையும் அத்தகையனவாக இருந்தன. அவ்வாறு நடக்குமாறு அவன் தலைவி கானெரில் அவனுக்கு மறைமுகமாக ஊக்கமளித்திருந்தாள். தன் அரசனை இவ்வாறு இகழ்ந் துரைப்பதைக் கேயஸ் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; உடனே அவனை உதைத்துத் தள்ளினான். இவ்வாறு புதிய ஏவலாள் செய்ததைக் கண்ட லியர் அவன்மீது மிக்க அன்பு காண்டான்.
லியரிடம் அன்பு கொண்டவன் அவன் ஒருவனே அல்லன். லியர் தன் அரண்மனையில் வாழ்ந்தபோது, அங்கிருந்த நகைச் சுவையாளன் ஒருவன் அவன் நிலைமைக்குரிய அளவில் அன்பு செலுத்தி வந்தான். லியர் முடியிழந்த பின்னும் அவன் விடாது தொடர்ந்தான்; தன் திறமான பேச்சுக்களால் மன்னனை மகிழ்வித்தான்; சில வேளைகளில், அறியாமையால் முடியிழந்ததும், செல்வமெல்லாம் பெண்கட்குப் பகுத்தளித்ததும், ஆகிய மன்னன் செயல்களைக் குறித்து எள்ளி நகையாடினான்; பாடலாகவும் பாடினான். இவ்வாறு, அவன் முரட்டுப் பேச்சாலும் பாட்டாலும் பற்பலவாறு தன் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிப் படுத்தினான். அவன் வஞ்சமற்ற நெஞ்சினன்; ஆதலின், சில வேளைகளில் கானெரில் முன்னிலையிலும் இவ்வாறு ஒழுகினான்; அவன் குத்தலாகப் பேசிய கடுஞ்சொற்கள் அவள் நெஞ்சினைச் சுட்டன. (தந்தைக்குப் பிற்பட்டிருக்க வேண்டிய மக்கள் அவனுக்கு முற்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்துடன்) குதிரையை வண்டி இழுத்துச் செல்லுதல் குறித்துக் கழுதையே அறியும் என்றும், இப்போது உள்ளவன் லியர் மன்னன் அல்லன்; அவன் நிழலே என்றும் வேறு பலவகையாகவும் அவன் பேசத் தொடங்கினான். இவ்வாறு சிறிதும் அஞ்சாது அவன் பேசி வருதலை அறிந்த கானெரில், அவனைக் கசையடியால் ஒறுப்பதாக இரண்டொரு முறை எச்சரித்தாள்.