82
அப்பாத்துரையம் – 37
3. தமக்கையினுங் கொடிய தங்கை
லியர் மன்னன் நாள் செல்லச் செல்லத் தான் மதிப்பிழந்து வருவதை உணரத் தொடங்கினான்.கொடிய மகளாகிய கானெரில் அன்புமிக்க தந்தையிடம் நடந்து கொண்ட தவறான முறையே அல்லாமல், வேறொரு செய்தியும் அதற்குக் காரணமாக இருந்தது.“தந்தையே! வீரர் நூற்றுவராகிய பெரும்படையுடன் நீர் என் அரண்மனையில் தங்கியிருப்பது துன்பந் தருவதாக உள்ளது. இவ்வரச குழாம் பயனற்றது; வீண் செலவை விளைப்பது; இதனால் உண்ணும் ஆரவாரமும் உட்குழப்பமுமே பெருகியுள்ளன. நூற்றுவர் வேண்டா. தொகையைக் குறைத்துக்கொள்ளும். உம்மைப் போலவே உம் வயதுக்கு ஒத்தவராய் உள்ள முதியோர் சிலரை உடன் வைத்துக்கொண்டால் போதும்," என அவள் வெளிப் படையாகக் கூறிவிட்டாள்.
இங்ஙனம் சிறிதும் அன்பின்றித் தன்னிடம் பேசியவள் தன் மகளே என்பதை முதலில் லியர் நம்பக் கூடவில்லை. தன்னிடமிருந்து தன் முடியைப் பெற்றுக்கொண்ட மகள் கானெரில், தன் வீரர் தொகையினைக் குறைக்கவும், தன் ஆண்டிற்கு ஏற்ற மதிப்பும் கொடுக்காமல் நடத்தவும் முன்வந்தாள் என்று அவன் எண்ணவும் முடியவில்லை. தகுதியற்ற அக்கோரிக்கையை அவள் வற்புறுத்தினாள்; லியர் அப்போது சினங்கொண்டவனாய், "பேராசை பிடித்த நாயே! பொய் பேசுகிறாய். என் வீரர் நூற்றுவரும் உண்ணும் ஆரவாரத்திற்கும் உட்குழப்பத்திற்கும் பெயர் போனவர் அல்லர். அனைவரும் உயர்ந்த நற்பண்புகளும் உண்மை ஒழுக்கமும் உடையவர்; கடமையைத் திறமையாய் ஆற்றும் ஆற்றல் உடையவர். நீ சொன்னது முற்றிலும் தவறு” என்று கடிந்துரைத்தான். பிறகு அவன், தன் குதிரைகளைப் பண்ணமைக்குமாறு ஏவலாளர்க்குக் கட்டளையிட்டான்; மற்றொரு மகள் ரீகன் அரண்மனைக்குத் தானும் தன்னைச் சூழ்வோரும் புறப்படவேண்டும் எனத் தெரிவித்தான்.
பின்னர், அவன் தன் மகளின் நன்றிகெட்ட தன்மையை கடிந்து கூறிய கடுஞ்சொற்கள் கேட்கத் தக்கன அல்ல. "நீ குழந்தையற்ற பாவியாக வாழ்வாயாக! ஒருகால், குழந்தை பிறந்தால், நீ என்னை வெறுத்து வைத்து ஒதுக்கியது போலவே,