பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 |

அப்பாத்துரையம் – 37

நீங்கவே இல்லை. பழிக்குப் பழிவாங்கும் கடமையே அவனை எந்நேரமும் தூண்டி வந்தது. அந்தக் கடமையைச் செய்யாது கழிக்கும் காலமெல்லாம் பாவத்தில் கழிக்கும் காலமாகவே அவன் கருதினான்; அதனை நிறைவேற்றக் காலம் தாழ்க்கும்வரை தந்தையின் ஆணையை மீறி நடப்பதாகவே நம்பினான். ஆயினும் எந்நேரமும் விடாமல் காவலர் சூழ்ந்திருக்கும் அரசனைக் கொல்வது எவ்வாறு? அஃது எளியதொன்றோ? அன்று. தன் தாய் கெர்ட்ரூட் அவனைவிட்டு நீங்காது எந்நேரமும் உடன் இருப்பதும் பெரிய தடையாக இருந்தது. அத்தடையை அவன் எவ்வாறு வெல்வான்? மேலும், அரசுக் கட்டிலைக் கவர்ந்தான் தன் தாயின் கணவனே என்பதை எண்ணும் போதெல்லாம் அவன் துன்புற்றான்; சோர்வும் உற்றான். இயல்பாகவே ஹாம்லெத் இளகிய நெஞ்சினன்; ஆகவே ஓருயிரைக் கொல்லுதல் என்பது அவனுக்கு அடாத கொடிய செயலாகத் தோன்றியது.நாட்பட்ட வருத்தமும் சோர்வும் அவன் துணிவை அழித்தன; அவன் உள்ளம் ஒருவழிப்படவில்லை. அவன் கண்ட உருவம் தன் தந்தையின் ஆவியுருவந்தானோ என்றும், தன் சோர்வும் வருத்தமும் அறிந்த பேய் ஒன்று அவ் உருவம் கொண்டு தோன்றிக் கொடுமை செய்யுமாறு தன்னைத் தூண்டியதோ என்றும் அவன் உள்ளத்தில் ஐயங்கள் எழுந்தன. எனவே, தான் கண்டதும் கேட்டதும் வெளிமயக்கமாகவும் பொய்யாகவும் இருப்பினும் இருக்கும் என்று அவன் எண்ணினான்; தெளிவான சான்றுகள் கிடைக்கும் வரையில் பொறுத்திருக்கத் துணிந்தான்.

3. பழிக்குப் பழி வாங்கும் உறுதி இத்தகைய தடுமாற்றங்களுக்கிடையே அவன் இருந்தபோது ஒருநாள் அரண்மனைக்குக் கூத்தர் சிலர் வந்தனர். அதற்கு முன்னரும் அவர்கள் வந்தது உண்டு. அப்போது ஹாம்லெத் அவர்கள் கூத்தைக் கண்டு மகிழ்ந்ததும் உண்டு. ட்ராய் மன்னன் ப்ரயம்" என்பவன் இறந்ததையும், அவன் மனைவி ஹெக்யுபா" வருந்தியதையும் அவர்கள் நடித்துக் காட்டியபோது ஹாம்லெத் உருக்கத்தோடு கவனித்திருந்தான். இப்போது அவர்கள் வந்தவுடன் ஹாம்லெத் வரவேற்றான்; அந்தத் துன்பக் கதையை மீண்டும் நடிக்குமாறு வேண்டினான். அவர்கள் அவ்வாறே நடித்தார்கள்.