சேக்சுபியர் கதைகள் - 2 2
165
அரசன்: அது மட்டுமன்று; அந்த உருவில் அவளுயிர் அப்படியே இருக்கிறது. அதோடு அக்கண்கள் அசையவே செய்கின்றன. ஆம். அம்முகம் நிறம் மாறவே செய்கிறது, ஆம்; இஃது அவளே!
பாலினா : சரி, அரசே, இனி நான் திரையைப் போட்டு விடுகிறேன்.இப்பொழுதே அதன் கண்ணசைகிறது; காதசைகிறது, என்கிறீர்கள். இன்னுங் கொஞ்சம் சென்றால் நடக்கிறது பறக்கிறது என்று கூடக் கூறுவீர்கள்.
அரசன்: இல்லை, இல்லை; திரையை இழுக்காதே! ஆ! அவ்வுருவுக்கு உயிரிருந்து நான் உருவாய் உயிரற்றிருக்கக் கூடாதா? ஆ! அஃது உருவன்று; அவள் உயிர்க்கின்றாள். அவள் உயிர்ப்பு என்மீது படுகிறது.
பாலினா: அரசே! தங்கள் மனம் நல்ல நிலையிலில்லை. இன்னும் கொஞ்சம் சென்றால், அஃது உங்கள் கண்ணுக்கு உயிர் உள்ள பெண்ணாய் விடும்! வேண்டா. திரையைப் போட்டு விடுகிறேன்.
அரசன்: ஓரிரண்டு நொடி பொறு பாலினா, உனக்குப் புண்ணியம் உண்டு. ஒருவரும் என்னை எள்ளி நகையாடாதீர்கள். நான் கிட்டப்போய் அவளுக்கு ஒரு முத்தமளிக்க வேண்டும்.
பாலினா: சரி, விரைவில்! நான் திரையை ஒரு நொடியில் மூடவேண்டும்.
அரசன்: முடியாது. பாலினா ஒரு நொடியன்று; ஒரு ஆண்டாயினும் திரையைக் கீழே விடவிடேன். நான் இங்கேயே இருந்து என் ஹெர்மியோனைப் பார்த்து கொண்டிருக்கப் போகிறேன்.
பெர்திதா: ஆம் அப்பா! நானும் அப்படியே என் தாயைப் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறேன்.
பாலினா: தந்தையும் மகளும் இப்படிப் பித்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு வேண்டுமானால், இந்த உருவுக்கு உயிர்கொடுக்கக்கூட என்னால் முடியும். ஆனால் நீங்கள் சூனியக்காரியின் செயல் என்று ஏளனம் செய்யக்கூடுமே!