பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

197

திறையாகக் கொண்டது தங்களது திங்கள் முகம்! அஃது எவ்வாறிருக்குமோ என்பதை நான் சற்றுப் பார்க்கலாமா?

வயோலா உட்புகுந்தபொழுதே மாரன் தன் கரும்பு வில்லைக் கையிலெடுத்தான். அவள் பேசத் தொடங்கிய போதே அவன் வில்லை வளைத்துவிட்டான். இம்மொழிகள் அவள் செவியில் விழாமுன் அவனது மலர்க்கணை ஒலிவியாவின் நெஞ்சை ஊடுருவிற்று. அவள் உடனே திங்களின் பரிவட்டம் போன்ற தனது மெல்லிய முகமூடியை ஒதுக்கினாள். திங்களின் பின்புறம் கதிரவன் ஒளிந்துகொண்டால் எப்படியோ, அப்படி அவள் முகம் ஒளிவீசிற்று.

ஒலிவியா : சொல் நயமிக்க செல்வரே! நீர் என் முகத்தைப் பார்க்க விரும்புவதேன்? உம்முடைய தலைவர் உம்மை இம்முகத்தினிடமா தூதாக அனுப்பினார்? சரி, என் முகத்தைப் பற்றிய உமது எண்ணமென்ன?

வயோலா: அதன் அமைப்பு நான்முகன் கைக்கு ஒரு நற்சான்றே. பொன்மையும் செம்மையும் நீலமும் இடையிடை இட்டுக் கலந்த இவ்வொப்பற்ற ஓவியம் மனிதர் கையால் என்றுந் தீட்டுந்தரத்ததன்று. ஆம், என்ன அருமையான அழகு! இத்தகைய அழகை உலகிற்குக் காட்டவந்த நீ அதன் மாதிரியை உலகத்திற் படியவிடாதது எவ்வளவு கொடுமை!

ஒலிவியா: நீர் என்ன தூதரா, கவிஞரா? என் அழகைப் பார்த்துக் குறிப்பெடுத்து வரவா உம் தலைவர் உம்மை அனுப்பினார்? அப்படியானால், உமக்குத் துணை செய்கின்றேன். தை எழுதிக் கொள்ளும். கொவ்வைப்பழம் போன்ற இதழ்கள் ரண்டு; கதிரொளியோடிய வானொத்த நீலக்கண்களும், அவற்றைக் கவிந்து பொதிந்த இமைகளும் இரண்டிரண்டு; எட்பூவொத்த மூக்கு ஒன்று; இவ்வளவு போதுமா?

வயோலா: உனது தற்பெருமை ஏட்டிலடங்காதது; ஆனால், உன் அழகும் அப்படியே. அதில் விழுந்து என் தலைவர் அழுந்துகிறார். ஓ! அவர் காதல் துயரை நான் அறிவேன்! நீ மட்டும் அவர் காதலுக்கு இணையாகக் காதல் தரமுடியுமாயின், எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆனால், அக்காதலுக்கு இணை ஏற்படல் அரிதினும் அரிது. அழகினுக்கு அரசியாய்விட்ட நீ கூட