பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

8

(247

வந்து பிறந்த ஜூலியட்டேயாவாள். திருமகள் பிறந்த பாற்கடலுள் அவளுடன் கூடவே பிறந்த நஞ்சுபோல அவளுக்கு 'டைபால்ட் என்ற மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் இவ்விளைஞர்களினுடைய பெருமித நடையையும் அவர்களிடம் கப்பியூலத்துப் பெருமகன் காட்டிய நன்மதிப்பையும் கண்டு உள்ளூறப் பொறாமை கொண்டான்.நண்பரைவிட ஒருவனை நன்கு உற்றுக் கவனிப்பர் பகைவர் ஆதலின் அவன் அவர்களை அடுத்து, அவர்கள் தமக்குள் தாழ்ந்த குரலிற் பேசுவதைக்கூட உற்றுக் கேட்டு வந்தான். தன் குடிக்கு ஒரு குலக்கொழுந்தான ஜூலியட்டின் மீது அவன் கண்கள் செல்வதையும் அவள் கவர்ச்சியில் அவன் ஈடுபடுவதையும் காண அவனது பொறாமைத் தீ இன்னும் பலமடங்கு மிகுதியாயிற்று.

இறுதியில் அவன் பேச்சிலிருந்தும், நடை உடை தோற்றத் திலிருந்தும் அவன் மாண்டேகுக் குடியினன் என்பதையும், அக்குடியின் தலைவன் மகன் ரோமியோ என்பதையும் உன்னிப்பாய் அறிந்தபோது, அவனுடைய உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த பொறாமைக் கனல் வெஞ்சினமாகப் பொங்கி எழுந்தது. ஆனால், விருந்து விழாவின்போது பூசல் விளைப்பது அதன் பெருமையைக் குலைப்பதாகும் என்பதை உன்னி அவன் மிக முயன்று தன்னைத் தற்காலிகமாக அடக்கிக் கொண்டான்.

இரும்பும் காந்தமும் எங்கிருந்தாலும் எது வந்து இடைப்பட்டாலும் ஒன்றை ஒன்று ஈர்த்தே தீருமன்றோ? அதுபோல எதிரெதிரான பகைக் குடியுட் பிறந்தும், இவ்விரு சிற்றுயிர்களும் ஒன்றையொன்று பார்த்தது தான் தாமதம்; உடன் தாமே உடல் மாறி ஒருவர் உடலில் ஒருவர் புகுந்து வருத்தத் தொடங்கினர்.

விருந்தின் முடிவில் நங்கையர் தம் ஆடல் பாடல்களை விடுத்துக் கலைந்த போது ரோமியோ ஜூலியட்டை அணுகினான். அவ்வளவு ஆடல் பாடல்களினிடை யேயும் அவள் உள்ளம் அவன் பக்கமாகவே நாடி நின்றதாதலின் அவளும் தன்னை அறியாமலேயே அவனை அணுகினாள்.

முகமூடியணிந்தோர் அதன் மறைவிலிருந்து கொண்டு கபடின்றித் தம் கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அதை