பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அப்பாத்துரையம் – 37

விருந்து சிறப்பாக நடைபெற்றது. அரசி எல்லோரையும் தக்கவாறு வரவேற்று மகிழ்வித்தாள். வந்த விருந்தினரும் களிப்புற்றிருந்தனர்; விருந்தினர்க்கு நன்றி கூறும்போது, மாக்பெத், “நீங்கள் எல்லோரும் அரண்மனைக்கு வந்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்தீர்கள்; உங்களுக்கு எமது நன்றி உரியதாகுக. ஆனால் எம்முடைய தோழன் பாங்கோ இப்போது இங்கு வந்து எம்மை மகிழ்விக்கவில்லை. அவன் வேண்டுமென்றே இவ்விருந்தைப் புறக்கணித்தான் என்று தெரிகின்றது,” என்று நெட்டுயிர்ப்போடு கூறினான்.

உடனே, அங்கே ஒன்று தோன்றி அங்காந்த வாயுடன் வந்தது. அது மாக்பெத்தை விடாமல் தொடர்ந்து சென்றது; அவனுக்கு முன் சென்று அவனுடைய இருக்கையில் அமர்ந்தது. வஞ்சனையால் கொல்லப்பட்ட பாங்கோவின் ஆவிதான் அவ்வாறு வந்து அமர்ந்தது. அஞ்சாமைக்கும் ஆண்மைக்கும் பெயர் போன மாக்பெத் அஞ்சினான்; நடுங்கினான்; வெளுத்தான்; அந்த ஆவியை உற்று நோக்கினான்; திகைத்தான் ஆனால், அவனுடைய மனைவியும் விருந்தினரும் அந்த ஆவியைக் காணவில்லை. “நன்றாகப் பேசிக் கொண்டிருந்த அரசர் திடீரென்று பேச்சின்றிச் செயலின்றி நாற்காலியைப் பார்த்துக்கொண்டு வாளா நிற்கின்றாரே!" என்று அனைவரும் வியப்புற்றனர். அவன் மனைவி மட்டும் அருகே சென்று, அவன் அவ்வாறு விழித்துக்கொண்டு நிற்பதைக் கடிந்து கூறினாள்: முன்பு பலமுறை கண்ட மாயத்தோற்றங்கள் போன்றே இது; அஞ்சவேண்டா,” எனப்பிறர்க்குக் கேட்காமல் சொல்லித் தேற்ற முயன்றாள். அவனோ, விழித்துப் பார்த்துக் கொண்டே நின்றான்; சற்றும் திரும்பவில்லை; பித்தன் போல் பிதற்றத் தொடங்கினான்; அவ்வாறு பிதற்றும் போது, கொலையைக் குறித்த சொற்களும் கலந்தன. அச்சொற்களைக் கேட்டதும், அவன் மனைவியும் அஞ்சினாள். "யாரும் அறியாமல் மறைவாய் இருந்த கொலைச் செய்திகள் வெளியாகி விடுமே! அந்தோ, என் செய்வேன்," என்று அவள் கவலையுற்றவளாய், விருந்தினர் அனைவர்க்கும் விரைந்து விடை கொடுத்து அனுப்பினாள்.

கொலைஞன் மனம் பலவாறு மயங்குதல் இயற்கை. அதனால், மாக்பெத் பல கொடிய காட்சிகளை அடிக்கடி கண்டு