பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

55

நல்லது ஒன்றையும் அவன் கற்றுக் கொள்ளவில்லை; ஆதலால், விறகு வெட்டிக்கொண்டு வருதல் முதலான வருத்தமான வேலைகளை அடிமைபோலச் செய்து வந்தான். இந்த வேலைகளைக் காலிபன் செய்யும்படி ஏரியல் வற்புறுத்திவந்தான். இவையெல்லாம் பிராஸ்பிரோவின் ஏற்பாடு.

பிராஸ்பிரோ தவிர, மற்றவர் கண்ணிற்கு ஏரியல் தெரிவதில்லை. அவன், காலிபன் வேலை செய்யாமல் சோம்பேறியாய் இருக்கும்போது தந்திரமாய் வந்து கிள்ளுவான்; சிலவேளை காலிபனைச் சேற்றில் தள்ளுவான்; பிறகு, குரங்கு போல அவன் முன்வந்து பல் இளித்துச் சிரிப்பான்; உடனே வடிவுமாறி முள்ளம் பன்றியாய்த் தோன்றி அவன் நடக்கும் வழியில் கிடப்பான். அப்பன்றியின் கூரிய முட்கள் செருப்பு இல்லாத தன் கால்களில் தைத்து வருத்தும் என்று காலிபன் அஞ்சுவான். பிராஸ்பிரோ இட்டவேலைகளைச் செய்யாமல் காலிபன் சோம்பியிருக்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட கொடிய தந்திரங்களால் ஏரியல் அவனைத் துன்புறுத்துவான்.

ஏரியல் போன்ற வல்லமை வாய்ந்த ஆவிகள் தன் கட்டளைப்படி நடந்ததனால் பிராஸ்பிரோ அவற்றின் உதவியினால், கடல் அலைகளையும் காற்றையும் தான் நினைத்தபடி ஆட்டிவந்தான். அவன் கட்டளையால் அவை கொடியதொரு புயற்காற்று உண்டாக்கின. அப்புயற்காற்றால் ஓயாது உயர்ந்து எழுந்து அலைத்த கடல் அலைகளின் நடுவே அழகிய பெரிய கப்பல் ஒன்று சிக்குண்டு தவித்தது. அந்தக் காட்சியைப் பிராஸ்பிரோ தன் மகளுக்குக் காட்டி, அக் கப்பலில் தங்களைப் போன்ற மக்கள் இருப்பதாக அறிவித்தான்.

மிராந்தா:அன்புள்ள தந்தையே! இந்தப் புயல் உம்முடைய மந்திரவன்மையால் ஏற்பட்டதனால், அக்கப்பலில் உள்ளவர்கள் படும் துன்பத்திற்காக மனம் இரங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்தோ! எனக்கு ஆற்றல் இருக்குமானால் கடலை மண்ணின் கீழ் அமிழ்த்திவிடுவேன்; அத்துணை அருமையான உயிர்களோடு அந்த நல்ல கப்பல் அழியும்படி விடேன்.

பிராஸ்பிரோ: அருமை மிராந்தா! ஒரு தீங்கும் நேராது. அஞ்சாதே! கப்பலில் உள்ள ஒருவருக்கும் ஒரு துன்பமும் நேராத படி கட்டளையிட்டிருக்கிறேன். மகளே! உன் நன்மையைக்