பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம்

உலகில் தனக்கு எத்தகைய விருப்புக்கும் இடனில்லையென்று கண்டு அவனும் சாகத் துணிந்து விட்டான். இதனையறிந்தும் சேடியார் அவனைத் தேற்றி அவள் உண்மையில் இறக்கவில்லை என்று கூறினர்.

அவர்கள் கூறி வாய்மூடுமுன் கிளியோப்பாத்ராவே நேரில் வந்து அவன் காலில் வீழ்ந்து, “நான் தங்கள் வாழ்வைத் தொலைத்தவள்; தங்கள் பெருமைக்கும் தங்கள் காதலுக்கும் ஒவ்வாதவள்; என்னை அதற்காக எப்படித் தண்டித்தாலும் சரி; தாங்கள் காட்டும் வெறுப்பையும் சீற்றத்தையும் மட்டுமே கண்டு அஞ்சுகிறேன். தங்கள் காதலுக்காக உயிர் விடுவதாயின் மகிழ்ச்சியுடன் இறப்பேன்” என்றாள்.

அந்தோணி அவளைத் தன் நீண்ட கைகளால் வாரி எடுத்தணைத்து, 'என் அரும்பொருளே! நின் அன்பை நோக்க இப்பேரரசும், இவ்வுலகுந்தான் என்ன விலையுடையது! நின் ஒரு புன்முறுவலுக்காக இன்னும் ஏழுமுறை இவ்வுலகத்தை வென்று வென்றிழக்க நேரினும் பொருட்படுத்தேன். நீ கவலை கொள்ள வேண்டா” என்றான்.

இப்போது கிளியோப்பாத்ராவுக்குத் தன் காதல் போயிற்றென சீற்றம் மறைந்துவிட்டது; அதோடு அந்தோணியோ விற்கும் தன் கிளியோப்பாத்ரா போயினள் என்ற வெந்துயர் அகன்றது. முன்போல் அவளது மதிமுகமும், துணைக்கரங்களும், இன்மொழிகளும் அவனுக்கு உயிரும் ஊக்கமும் அளித்தன. அவன் அவள் முகத்தை உற்றுநோக்கிய வண்ணம், “ஆம், இம்முகத்தில் காதல் ஒளியுள்ளவும் என் உள்ளத்தில் வீர ஒளிக்குக் குறைவில்லை. உன் பெயரால்-உன் காதலின் பெயரால்- இன்னும் ஒருமுறை இவ்வுலகை வெல்வேன்” என்றெழுந்தான்.

அந்தோணியை நிழல்போல் தொடர்ந்து உடலுறுப்புக் களோ என்னும்படி மாறுபாடின்றி அவன் கருத்தறிந்துவிய அவன் வீரரும், துணைத் தலைவரும் இதுகாறும் அவன் காதற் பெரும்புயலாலும் சீற்றத்தாலும் தன் நிலை இழந்து நிற்பதுகண்டு வருந்திச் செயலிழந்து நின்றனர். இப்போது அவன் முகத்தே வீரக்களையைக் கண்டதுமே, "இனித் தயக்கம் வேண்டா, எம் தலைவர் எழுந்தார்; இனியும் வெற்றி நமதே. உலகம் நமதே” என்று ஆரவாரித்து எழுந்தனர்.