பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

91

அவள் மனதில் ஒன்றன்பின் ஒன்றாகப் பெர்ட்டிரமின் வாழ்க்கைப் படங்கள் எழுந்தெழுந்து நடனமிட்டன. அதன் இறுதிக் காட்சியை நினைக்க நினைக்க அவள் அங்கங் குலைந்தது, பெர்ட்டிரம் அன்று வெறுப்பு நிறைந்த கண்களோடு அவளை ஏளன நகைகொண்டு நோக்கிப், "பேதாய், எனக்கும் உன் காதலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இதோ, என் கையிலிருக்கும் இக்கணையாழியை என்னிடமிருந்து, எத்தகைத் திறமிருந்தாலும் உன்னால் வாங்க முடியுமா? அதுபோலத்தான் என் காதலைப் பெறும் திறமும் இருக்கும். நீ இக்கணையாழியைப் பெறும் நாளே என் காதலைப் பெறும் நாள்” என்று சீறியுரைத்த கனல் மொழிகள் அவளது நெஞ்சத்திரையில் கொழுந்து விட்டெரிந்து துன்பமாகிய புகையை எழுப்பின.

படப்பதைக்கும்

என் செய்வாள் பாவம்! பஞ்சு பாதத்தையுடைய அம் மெல்லியலாள், பருக்கைக் கற்களென்றும் படர்முள்ளென்றும் படுகரென்றும் பாராமல் அலைந்து திரிந்து, இறுதியில், வினைப் பயனின் வலியால், பெர்ட்டிரம் வாழ்ந்துவந்த அதே பிளாரென்ஸில் வந்து சேர்ந்தாள்.

று

ஆ, விதியின் இயைபுகிடந்தவாறு என்னே! ஹெலெனாவை விட்டொழிய வேண்டும் என்று வெளிவந்த பெர்ட்டிரமும், பெர்ட்டிரம் வீட்டிலிராது அகலவேண்டு மென்று புறப்பட்ட ஹெலெனாவும் இப்படி அயல் நாட்டில் வந்தொன்றுதல் வியப்புடையதன்றோ?

ஹெலெனா அவ்வூரில் ஒரு மூதாட்டியுடன் தங்கி அவள் ஆதரவில் இருந்து வந்தாள். அம்மூதாட்டியின் புதல்வி ‘தயானா என்பவள் ஹெலெனாவின் மறுபதிப்போ என்று சொல்லம்படி ஒத்த பருவமும் ஒத்த உருவமும் சாயலும் உடையவளாயிருந்தாள். சின்னாட்களுக்குள் அவ்விருவரிடையே இணைபிரியா நட்பும் பற்றும் ஏற்பட்டன. அப்போது அவர்கள் ஒருவர்க்கொருவர் பொதுச்செய்திகளையும், பின்பு தத்தம் விருப்பு வெறுப்புகளையும் இறுதியில் தத்தம் வாழ்க்கைச் செய்திகளையும் கூறிக்கொண்டனர்.

அவர்கள் இருவரும், இரு வேறுடலிலும் மாறிப் புக்க ஒரே உள்ளத்தின் இரு பகுதிகளே என்னும்படி இங்ஙனங் கனிவுடன் கலந்து உறவாடி இருக்கும் நாளில், ஒரு நாள் ஹெலெனா கல்லுங்