பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

அப்பாத்துரையம்

இதனைக்கூர்ந்து கண்டுகொண்ட காஸியஸ் அவன் பக்கம் வந்து நின்று பேச்சுக்கொடுத்து, ஸீஸரைப் பற்றியும், நகராட்சி முறையைப் பற்றியும் அவன் கொண்டிருந்த கருத்துக்களை நயமாக உசாவி அறிந்து கொண்டான். அதன்பின் அவன், "என் அரிய நண்ப! நானும் அன்பர்கள் பலரும் இதுபற்றியே உன்னுடன் கலந் தாராய வேண்டுமென்று நெடுநாளாகக் காத்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் நீயோ சாம்பவான் மாதிரி உன் உயர்வையோ, பிறர்உன்னைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணங்களையோ அறியமாட்டாதவனாய் இருக்கிறாய்! ரோம்நகர மக்கள் ஸீஸரின் கொடுங் கோன்மையைத் தாங்கமுடியாது வருந்துகிறார்கள். குடியாட்சிக்கொரு குலதெய்வமாகிய புரூட்டஸின் குடும்பத்தில் பிறந்த நீதான் இதில் அவர்களுக்கு வழி காட்டியாய் நிற்கவேண்டுமென்று அவர்கள் எதிர் பார்க்கிறார்கள்,” என்றான்.

புரூட்டஸ்: நான் எங்ஙனம் வழிகாட்டுவது? ஸீஸரோ என் அன்பார்ந்த நண்பனாவான். அவன் ஒப்பற்ற வீரமும் பெருந்தன்மையும் வாய்ந்தவன். ரோம் நகருக்கே ஏன், உலகிற்கே பேரொளி போன்றவன். அப் பேரொளியே புகையடைந்து விட்டால் அதனை எதைக்கொண்டு விளக்குவது?

காஸியஸ்: என்ன புரூட்டஸ்! நீயே இப்படிக் கூறினால் பின் அறியாதவர்கள் என்ன சொல்லமாட்டார்கள்? அவன் நண்பனானால் என்ன, வீரன் ஆனால் என்ன? அதற்காக நாம் நம் ஆண்மையையும் நாட்டின் நலனையும் அவனுக்குப் பலி கொடுக்க வேண்டுமா?

புரூட்டஸ்:உண்மை.நீ சொல்வது உண்மை, அவனிடம்நான் மிகுந்த பற்றுடையவனேயாயினும் தாய் நாட்டினிடம் அதனினும் மிகுந்த பற்றுடையேன். அவனிடம் எவ்வளவு அன்புடையே னாயினும் அதற்காகத் தன் மதிப்பை விட்டுக்கொடுக்கமாட்டேன். ஆனால், இவ்வகையில் நாம் என்னதான் செய்யக்கூடும்?

காஸியஸ் விடைபகருமுன், விழாக்கூட்டத்தின் பக்கமிருந்து ‘கொல் கொலோ கொல்' என்ற பேராரவாரம் கேட்டது. அது கேட்டுப் புரூட்டஸ், “நான் கேள்விப்பட்டபடி ஸீஸருக்கு அவ்வந்தோணியின் முயற்சியால் முடி அளிக்கப்பட்ட தென்றே அஞ்சுகின்றேன்” என்றான்.