பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம்

மனங் கனிவுற்று வழி விட்டனர். படை வீட்டைக் காத்து நின்ற காவலர்கூடக் கோரியோலானஸின் தாய் என்று கேட்டதுமே கைகூப்பி வணங்கி உட்செல்ல விடுத்தனர்.

5. வீரத்தாயும் வீரமகனும்

படைவீட்டினுள் தனதிருக்கை அறைக்கு வெளியே வந்து வாளூன்றிய நிலையில் கற்சிலை என நின்றான் கோரியோலானஸ்.

அவன் முகத்தில் தோன்றிய மாறுதல் ஒவ்வொன்றையும் தம் இரு கண்களும் இமையாடாமல் கவனித்து நின்றனர் வால்ஷிய மக்கள்.

அவன் முன் அவன் மனைவி முதலில் வந்து தலைகுனிந்து வேனிலில் தளர்ந்து வாடிய கொடியென நின்றான்.அவள் கண்ணீர் அவள் கன்னங்களின் ஒளியையே கரைத்து மார்பகத்தை முற்றிலும் நனைத்துப் பின்னும் வழிகின்றது. அவனது கனிந்த பார்வை ஒன்றிற்கு நெடுநேரம் காத்து நின்றும் பயனில்லாதது கண்டு அவள் மனமழுங்கி விம்மி விம்மி அழுதாள்.

தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பதற்கிணங்க அவ்வழுகை அவன் உள்ளத்தை ஈர்த்து ஏர்க்காலுழுத்து போல உழுதது. ஆனால் அவன் தன்னை அடக்கி அவள் பக்கமிருந்து தன் கண்களைத் திருப்பிக்கொண்டு, “உன் கணவன் ரோமர் தலைவனான கோரியோலானஸ், அவன் இறந்து விட்டான். நான் வேறு கோரியோலானஸ்-நான் வால்ஷியர் நண்பனான கோரியோலானஸ்-நான் ரோமின் பகைவன்-உங்கள் பகைவன்- ஆதலால் என்னைவிட்டுச் செல்க” என்றான்.

வர்ஜீலியா இச்சுடுசொற்கள் கேட்டுத் துடிதுடித்தது அவன் கால்களில் விழுந்தழுதாள். அவர்கள் பிள்ளை ஐந்து ஆண்டுகூட நிரம்பாத சிறுவன் கயஸ் அவள் முன்தானையைப் பற்றி நின்று தந்தையின் கடுகடுத்த முகத்தைப் பார்க்கவும் அஞ்சி 'அம்மா, அம்மா' என்றழுதான்.

அக்காட்சி கண்டு கல்லும் கரையும். ஆனால் கல்லினும் கடுமையான வஞ்சினம் கோரியோலானஸின் மனத்திற் குடிகொண்டிருந்தது.