பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

59

துறந்தவர் குலத்திற் பிறந்த நீ, ரோமர் உயிர் கொன்ற பழியையா இத்தீங்கறியா இளம் பாலன் தலையிலும் அவன் வழிவழிக் குடும்பத்தின் மீதும் சுமத்துவது?" என்றாள்.

கோரியோலானஸின் வீர உள்ளம் வெந்தீயிற் பட்ட மெழுகென உருகி வழிந்தது. அவன், 'நீங்கள் கூறும் உண்மைகளை நான் அறியாதவன் அல்லன். ஆனால், என்று உங்கள் ரோம் என்னைத் துரத்தியதோ அன்றே நான் ரோமுக்கு உரியவன் அல்லனாயினேன். என் கடமையும் ரோமுக்கு அன்று; இவ் வால்ஷியருக்கே, இவர்கள் என் நண்பர்கள்; அதோடு ஒப்பற்ற வீரர்கள். தமக்கு உழைத்த நண்பர்களைப் பழித்து நாட்டை விட்டுத் துரத்தும் கோழைகள் அல்லர்' என்றான்.

அவன் கூறியது உண்மையாயினும், தன் நாட்டின் குறைகளை எதிரிகள்முன் சொல்கிறான் என்று சீறிக் கண்டிக்க எழுந்த நாவைத் தான் வந்த நோக்கத்தை எண்ணித் தடுத்தடக்கிக் கொண்டு அவள் கூறுவாள்.

எந்த வீரருக்காவது எந்தக் கோழையருக்காவது அன்று, இன்று நான் உன் மனம் கரையும்படி வந்து நின்று மன்றாடுவது. அவர்கள் உன் பகைவர்கள் என்பது உண்மையே. ஆனால், உனக்காக அழுவது அவர்கள் அல்லர் உன் தாய். உன் மனைவி, உன் பிள்ளையாகிய நாங்கள் அழுகிறோம். நாங்களல்லவோ உன்னால் பிள்ளையற்றும், துணையற்றும், தந்தையற்றும் தவிப்பதுடன், தாய்நாட்டின் பழியையும் சுமக்க இருக்கிறோம்.

கோரியோலானஸுக்கு, “ஏன் இப்பெண்கள் முகத்தில் விழித்தோம். ஏன் இவர்கள் மொழிக்குச் செவிக் கொடுத்தோம் என்றாயிற்று.

ஆனால், அத்தாயின் துயர்கண்டும்-அவள் பின் நின்று கண் கலங்கியழும் தன் துணைவியின் அழுகை கேட்டும் அவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்துப்பின் தன்னையும் பார்த்து மருளும் தன் இளஞ்சிங்கத்தையும் அதன் எதிர்காலத்தையும் உன்னியும், அவன் தன் உயிரினும் இனிய பழியையும் அதனுடன் தன் உயிரையும் துறப்பதென்னம் பேருறுதியைக் கொண்டான்.

“அன்னையே! நீ ரோமின் ஒப்பற்ற புதல்வி என்பதைக் காட்டினாய்! என் தாய் என்பதை மட்டும் காட்டத் தவறுகிறாய்! அதனால் என்ன? நான் மகன்தான் என்பதைக் காட்டுகிறேன்.