பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

69

அலைந்து பசியாலும் விடாயாலும் வருந்திய மக்கள் முன் வேடச்சிறாரும் சிறுமியரும் இன்முகத்துடன் தேனும் தினைமாவும் ஊனும் கொண்டு வந்தாலெப்படியோ அப்படிக் களிப்புற்றனர். இதுவரை ஒருவருக்கொருவர் செய்த தீமைகளைப் பற்றிக்கூட வற்புறுத்திப் பேசாது தோழர்களுடன் குத்தலாகப் பேசுமுறையில் எடுத்துக் காட்டிவிட்டுப் பின் இணக்கமாக ஒருவருடன் ஒருவர் கூடிக் குலாவலாயினர். இவ்வொற்றுமை நெடுநாள் நிலைத்திருந்தாலன்றித் தன் காரியங்கள் நடைபெற என்றறிந்த அக்டேவியஸ்ஸீஸர்,தன் நண்பர்களை அந்தோணியின் மனப்பாங்கறிந்து தன் ஒன்றுவிட்ட உடன்பிறந்தாளா அக்டேவியாவை அவன் மணக்கும்படி தூண்டச் செய்தான்.

அந்தோணியின் தெளிந்த மனச்சான்று இப்போது கிளியோப்பாத்ராவுடன் தான் நடத்திய சோம்பல் வாழ்வை வெறுத்ததாகலின், இனித் தான் நல் உணர்வுடையவனாய் ஆண்மை வாழ்வு வாழ இத்தகைய மணம் உதவும் என்று நினைத்தான். இதற்கேற்ப அக்டேவியா எளிய குணமும் உயர்ந்த கடமையுணர்வும் உடையவளாய்ச் சூதுவாதற்றிருந்தமையால், அவள் அன்று அவனது இப்பிரிவு மனப்பான்மையில் மிகவும் உயர்ந்தவளாய்க் காணப்பட்டாள். ஆகவே விரைவில் அவ் விருவரையும் ஸீஸர் மணமுடித்து வைத்துவிட்டான்.

அவர்களும் சிலநாட்கள் கிளியோப்பாத்ராவின் மாயவலை யினின்றும், ரோமின் அரசியல் சிக்கல்களினின்றும் விலகி நின்று தூய மணவாழ்க்கை யிலீடுபட்டனர்.

ரோமில் மூவரும் மீண்டும் ஒருங்கு சேர்ந்ததும் ணக்கமடைந்ததும் பாம்பியின் வலிமையைக் குறைத்தன. அவர்களை இனி எதிர்ப்பது அரிது என்று கண்டு அவன் அவர்களுடன் உறவு கொண்டுவிட எண்ணினான். அதற்கு அவர்களும் உடன்பட்டனர். உடன்படவே பாம்பி தன்னுடன் கப்பலில் வைத்து விருந்துண்ண மூவரையும் வருமாறு அழைத்தான். முக்கனிகளும் தேனும் பாலும் சிற்றுண்டிகளும் அவர்கள் நட்பிற்கறிகுறிகளாக வழங்கப் பட்டன. இனிப் போராட்டமின்றி நால்வரும் தம்முள் ஒருவரையொருவர் சரிசமமாகக் கொண்டு வாழ்வதென்றும், ஒருவர் பங்கில் ஒருவர் புகுவதில்லை என்றும் உறுதி கூறியபின் அவர்கள் பிரிந்தனர்.