பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

73

போர்வையைக் கிழித்து எறிந்துவிட்டு, முன்னினும் பன்மடங்கு ஆர்வத்துடன் விரைந்து கிளியோப் பாத்ராவிடம் சென்று சேர்ந்தான்.

"பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?" நீரின்றி வெடித்த நிலத்தில் மழைத்துளி விழுந்தாலன்ன அவன் வரவு அவள் நெஞ்சின் துடிப்பையும் ஏக்கத்தையும் அகற்றி அவளை ன்ப உலகேழினும் மேலாம் துறக்க உலகு எய்துவித்தது.

தானின்றி அந்தோணி வாழினும்கூட இனித்தான் அந்தோணியின்றி வாழ முடியாதெனக் கிளியோப்பாத்ரா கண்டாள். ஆகவே அவள் அதுமுதல், எங்கே அந்தோணி இயற்கை வீர உரு எடுத்துத் தன்னைவிட்டு அகன்று விடுவானோ என்று அஞ்சலானாள். அதன் பயனாக அவனது வீர உணர்ச்சி எழாதபடி ஓயாது காதல் உணர்சசியைத் தூண்டி இடைவிடா வேலையாயிற்று. மறந்துங்கூட அவன் அக்கோட்டையை விட்டகல எண்ணாதபடி செய்வதில் அவள் தன் ஒப்பற்ற திறனையும் மாயவித்தை களையும் காட்டலானாள்.

பெண்மையே உருவெடுத்து வந்ததுபோன்ற அப் பெண்ணரசிக்கு இது மிகக் கடுமையான பணியுமன்று. கூடலின் உயர்நிலை ஊடலே என்பதையுணர்ந்து, அவள் அந்தோணியை ஒரு சமயம் தன் பக்கம் ஈர்ப்பதும் அடுத்த கணமே அவனை வெறுத்துத் தள்ளுவதும் போல் நடித்து, அவன் ஆர்வத்தைப் பன்மடங்கு மிகைப்படுத்தினாள்.அவள் வரவும் செலவும், அவள் விருப்பும் வெறுப்பும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், நகைப்பும் சினமும், மாறி மாறி ஒளியும் நிழலும் போலவும், உடலும் உயிரும் போலவும், பகலும் இரவும் போலவும் நின்று, அவன் வீரமும் அறிவும் அவனிடம் வருவதற்கு ஓய்வு தராதபடி அவன் மனத்தைத் தாக்கி உரிமைப்படுத்தின.

ஆயின், என்ன இருந்தாலும் அவளும் பெண்தானே! தனது இம்முயற்சியினால் தன் உயிருக்கும் தன் காதலன் வாழ்க்கைக்கும் உலை வைக்கிறோமென்று அவள் அறிந்திலள்! ஜூலியஸ் ஸீஸரது மதிப்பிற்கும் பாம்பியின் அச்சத்திற்கும் இடமான அந்தோணி, தன் காதல் வலைப்பட்டு அக்டேவியஸ் ஸீஸர் போன்ற மோழையும் பாயும் ஏழையாய் விட்டான் என்று அவள் அறிந்திலள்!