பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 39

வருவித்துத் தருவதிலும் அவனுக்கு ஒத்தாசை செய்து ஊக்கினர். பாடுமாங்குயில் இவற்றை விரும்ப வில்லையாயினும் கணவனை மீற இயலாது கலந்துகொள்ள நேர்ந்தது. ஆனால் அன்பரசி தன்னாலியன்ற மட்டும் சாக்குப் போக்குகள் கூறி விருந்துகளுக்குப் போகாமல் ஒதுங்கியிருந்தாள். சாக்குப் போக்காகவே அவள் முதலில் தனக்கு உடம்புக்கு நலமில்லை என்று தன் அறையில் அடைபட்டுக் கிடந்தாள். ஆனால் விரைவில் உண்மையிலேயே அவள் நோய்வாய்ப்பட்டாள்.

அவள் உடல் வரவரத் துரும்பாக மெலிந்தது. உடலின் வெப்புத் தீயாகி அருகிலிருப்பவர் மீது வீசிற்று. தாய் சில சமயமும் தந்தை எப்போதோ ஒரு தடவையும் அவளை அமைதிப்படுத்தும் எண்ணத்துடன் “உன் விருப்பப்படிதான் திருமணம் செய்து வைப்போம் அம்மா! கவலைப்படாதே!" என்று கூறிவந்தார்கள். அத்தகைய நாள்களிலெல்லாம் அன்பரசியின் உடல் வெப்புக் குறையும். முகம் பெரிதும் தெளிவடையும். உடலில் சிறிது தெம்புண்டாகி எழுந்து உட்கார்வாள்.

தாய் தந்தையரின் இந்தச் சலுகையைக் கண்டு தையல் நாயகம் உள்ளூரப் புழுங்கினாள். அவள் பண்ணன் பாடிலியை அழைத்து அவனிடம் மறைவில் தனியாகப் பேசினாள். அவனையும் அவன் மனைவியையும் கடிந்து கொண்டாள்.

“உன் தொழிலகத்தை எவ்வளவு மேம்படுத்தினேன். உனக்கு நன்றியில்லை. உன் குழந்தையை என் குழந்தையாகப் பாராட்டி, எந்தப் பெண்ணுக்கும் எளிதில் கிட்டாத உயர்குடித்தொடர்பு உண்டு பண்ண என் உழைப்பையும் பணத்தையும் வாரி இறைத்து இருக்கிறேன். அவள் ஓர் ஆண்டிப் பயலுக்காக அத்தனையையும் வெறுத்து உடம்புக்கு நோய் என்று நடித்துப் பாசாங்கு செய்கிறாள், நாடகமாடுகிறாள். உன் மனைவி நான் ஏதோ உன் குடும்பத்தைக் கெடுக்க முனைந்ததாக எண்ணி என்னைக் கண்டு நடுங்குகிறாள்; கண்ணீர் வடிக்கிறாள். எனக்கு ஏன் இந்த வம்பெல்லாம்? நான் இனி உன் குடும்பத்தில் காலடி எடுத்து வைக்கப் போவதில்லை. வேறு எந்த ஏழைப்பெண்ணையாவது எடுத்து வளர்த்தால் அதனிடமிருந்தும் அதன் குடும்பத்தாரிட மிருந்தும் நன்றியும் பாராட்டுமாவது எனக்குக் கிடைக்கும் என்று கூறிவிட்டுச் சரேலென்று வெளியேறினாள்.

""