பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

103

உயர்குடியினர் பலர் சிறைப்பட்டு, குந்தள நாட்டிலும் கூர்ச்சர நாட்டிலும் கொண்டு போய் அடிமைகளாக விற்கப்பட்டனர். இவ்வகையில் சிறைப்பட்டுக் காணாமல்போனவர்களுள் வானவன் குடியின் ஒரே செல்வனான தங்கமணியும் ஒருவன். சிறைப்படும் சமயம் அவனுக்குப் பதினாறு வயதே நிரம்பி யிருந்தது. அவனை இழந்த அவன் தாய் புழுவாய்த் துடித்து உயிர் நீத்தாள். அவனிடமே உயிர்ப்பாசம் வைத்திருந்த அவன் தங்கை தண்பொருந்தம் உணவு, உடைகளில் கருத்துக் கொள்ளாமல் அனலிலிடப்பட்ட தளிர்போல வாடி வதங்கினாள். வானவனோ தன் பெருமை எல்லாம் மறந்து மைந்தன் நாளை வருவான், நாளை வருவான் என்று காத்திருந்தான். தன் ஆருயிர்ப் புதல்விக்கும் ஆறுதல் கூறி வந்தான்.

ஆண்டுகள் ஐந்து கடந்தன. பாண்டி நாட்டுப் போர் முடிவுற்றது. ஈழ அரசனுடன் சோழப் பேரரசன் நட்புறவு பூண்டான். சிறைப்பட்ட பலர் இருநாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டனர். இரண்டு நாடுகளிலும் அமைதி விழாக்கள் கொண்டாடப்பட்டன. ஆனால் வானவன் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை. வெளியே எங்கும் வெற்றி முழக்கங்கள், விழாக் கொடிகள், இன்னிசை அலைகள்! ஆனால் அவன் ல்லத்தில் மாள்வை நோக்கி மறுகிய மங்கையும், மாள முடியாது மாண்டுவந்த செல்வனும் ஒளியிழந்து வாடியிருந்தனர்.

ஓர் இளைஞன் தடதடவென வானவன் முன் வந்து ‘அப்பா' என்றான். வானவன் முகத்தை நிமிர்த்தவில்லை. அவன் காதுகள் கேட்கவில்லை.

ளைஞன் சற்றுத் திரும்பி நோக்கினான்.

ஒரு கட்டிலில் தலையணைகளிடையே ஒரு நுண்ணிழை போலக் கிடந்த உருவத்தைக் கண்டான்.

"ஆ! தங்கை தண்பொருந்தம், உன்னையா நான் இந்தக் கோலத்தில் காண்கிறேன்” என்றான்.

தண்பொருந்தம் உறங்கவில்லை, விழித்திருக்கவில்லை. அவள் மாளவில்லை; ஆனால் வாழ்வுமில்லை. அவள் நம்பிக்கை யிழந்து சோர்ந்து கிடந்தாள். அவள் செவியிலும் வந்த இளைஞன் சொற்கள் விழவில்லை.