பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. மருதூர் மாணிக்கம்

வீரக் கதைகள் பலவற்றை நீங்கள் கேட்டிருக்கலாம். வினோதக் கதைகள், வேடிக்கைக் கதைகளை வாசித்திருக்கலாம். ஆனால் 'மருதூர் மாணிக்க'த்தின் கதை மிகவும் புதுமை வாய்ந்தது. அதைப்போன்ற கதை எதுவும் கிடையாது. அதில் வீரம் உண்டு. வினோதம் உண்டு. வேடிக்கை உண்டு. இம்மூன்று பண்புகளும் அதில் ஒருங்கே நிரம்பியுள்ளன.

பாரத வீரன் அக்கால வீரன் அல்லன், அவன் இக்கால வீரன். பாரத வீரன் என்ற பெயர் பெற்றோர்கள் அவனுக்கு IL ட்ட பெயர் அல்ல. அவர்கள் இட்ட பெயர் மாரியப்பன் என்பதே. பாரத வீரன் என்பது அவன் பட்டப்பெயர். அவன் வீரப்புகழ் எங்கும் பரந்த பின், மக்களே அவனுக்கு ‘பாரத வீரன்’ என்ற பட்டப்பெயர் கொடுத்தார்கள்.

தென்பாண்டி நாடு மலை வளம், நாட்டு வளம், கடல் வளம் நிறைந்தது. அதில் செல்வமருதூர் என்று ஒரு மாநகரம் உண்டு. அந்த மாநகரம் தந்த மாணிக்கமே மாரியப்பன்.

செல்வ மருதூரில் ஒரு சில மாளிகைகளும் ஓட்டு வீடுகளும்தான் இருந்தன. கூரை வீடுகளும் குச்சு வீடுகளுமே மிகுதி. ஆனால் மாரியப்பன் குச்சு வீடுகள் எதிலும் பிறக்கவில்லை. அவன் செல்வக் குடும்பத்திலே பிறந்தான். மாளிகை ஒன்றிலே வளர்ந்தான்.

மாரியப்பனின் இளமையிலேயே, அவன் தாய் தந்தையர் காலமாய் விட்டனர். அவன் அத்தை செல்லாயி தான் அவனை வளர்த்து வந்தாள். அவன் தமக்கை மகளும் அவனுட னேயே வளர்ந்து வந்தாள். அவள் பெயர் செங்காவி. அவளுக்கும் தாய் தந்தை கிடையாது.செல்லாயியே அவளையும் வளர்த்து வந்தாள்.