பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 39

118 || தழைத்தோங்குக!” இவ்வாசகங்கள் எழுதிய அட்டைகளைப் பலர் ஏந்திக்கொண்டு வந்தார்கள்.

அவ்வப்போது பாட்டு முடிவில், இசைக்குழுவினரே இக்குரலை எழுப்பினார்கள். அனைவரும் அவர்களுக்கு எதிர்குரலிட்டு முழங்கிக் கூத்தாடினார்கள்.

கூட்டத்தின் நடுநாயகமாக ஓர் அழகிய பெண் காணப்பட்டாள். அவள் அன்ன நடை நடந்துவந்தாள். அவள் தலையில் ஒரு பூமுடி இருந்தது. அவள் ஆடையணி மணிகள் ஓர் இளவரசியை நினைவூட்டின. அவள் கையில் ஒரு வெள்ளித் தட்டு ஏந்தியிருந்தாள். அதில் இளவரசர் அணிவதற்குரிய ஒரு பொன்முடி இருந்தது. ஒரு பொன்னாலான செங்கோலும் ஒரு பொற் பேழையும் இருந்தன.

எதையும் கண்டு வியப்படையாதவன் மாரியப்பன்.ஆனால் இப்போது அவன் முகத்தில் வியப்புக்குறி தோன்றிற்று. அத்திடீர் அதிர்ச்சியில் அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவன் முன்னால் நடந்த நிகழ்ச்சிகள் அவன் வியப்பை இன்னும் பெருக்கின.

இளவரசியைப் போன்றிருந்த பெண் அவன்முன் வந்து நின்றாள். அவன்மீது பன்னீர் தெளித்துச் சந்தனம் பூசினாள். நெற்றியில் குங்குமத்தால் வீரப் பொட்டிட்டாள். பின், அனைவரும் வாழ்த்தொலி செய்ய, அவன் தலைமீது பொன் முடியைச் சூட்டினாள். அவன் கையில் செங்கோல் தரப்பட்டது. ‘பாரத வீரன் என்று விருதுப் பெயர் அடங்கிய பொற் பேழையையும் இளவரசி அவனுக்கு அளித்தாள். 'வாழ்க பாரத வீரன், வெல்க பாரத வீரன் கொற்றம்' என்ற குரல்கள் எழுந்தன. அவன்மீது நாலாதிசையிலிருந்தும் பொன் வெள்ளி மலர்கள் தூவப்பட்டன.

>

வெள்ளி மணியின் ஓசை போன்ற குரலில், இளவரசி வாய்திறந்து பேசினாள்.

“இன்னல்கள் அகற்ற வந்த இளங்கதிர் வீரனே! கண்கண்ட கற்கியே! செல்வமருதூரை வீரமருதூராக்க வந்த செல்வமே! மருதூர் மாணிக்கமே! புதிய விக்கிரமாதித்தனே! தமிழகத்துக்குத் தாங்கள் தந்த, தரஇருக்கிற பெருமை அளவிடற்கரியது.