பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

123

இளவரசி உண்மையில் இளவரசியுமல்ல. பெண்கூட அல்ல. ஒரு சிறுவனே. அவன் பெயர் மருது. அவன் பால் விற்றுப் பிழைத்த மாரியின் மகன். அவன் நல்ல அந்தசந்தமான வனப்புடையவன். சிங்கார ஆடை அணிகளில் விருப்ப முடையவன். நண்பர்கள் அவனுக்குப் பெண் உடை அணிந்து விளையாடுவார்கள்! 'மருதி' என்று பெண் பெயரிட்டு அழைத்துக்கேலிசெய்வார்கள்.ஆனால் வேடிக்கைவினையாயிற்று. அவன் நாடகத்தில் உண்மையிலேயே பெண்ணாக நடித்தான். மாரியப்பன் உண்மை வீர நடிப்புக்கு அவன் உண்மைப் பெண்மை நடிப்புச் சோடியாய் அமைந்தது. 'மாரியப்பன் வீரநாடக வாழ்க்கை நடத்த இருக்கிறான், அதில் அவனுடன் மருதியைப் போட்டியிட வைத்தாலென்ன!' என்று நண்பர்கள் கலந்து பேசிக் கொண்டனர். அதன் பயனே மேற்கண்ட நிகழ்ச்சி.

அவர்கள் அவனைப் புதிய பாரத வீரனாக்கத் திட்டமிட்டனர். அத்திட்டத்தில் ‘மருதி’ புதிய ‘அழகு பாரதி’ ஆனாள்.

புது நாடகத் திட்டம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக முன்னேறிற்று. மறுநாள் காலையிலேயே பாரத வீரன் இளவரசியின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினான். அதற்காக அவன் தன் சீடகோடிகளுடன் கலந்து ஒரு பொது மன்றம் கூட்டினான்.

இளவரசியின் சேடியர்களுடனும் குடிபடைகளுடனும் வந்த சிலர். அவன் சீடகோடிகளிடையே இருந்தனர். ஆனால் பாரத வீரன் அவர்களை முற்றிலும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. கண்டுகொண்டாலும் அவன் மகிழ்ச்சியே அடைந்திருப்பான். இளவரசியின் வாழ்வுடன் வருங்காலத்தில் அவன் வாழ்வு ஒன்றுபட இருந்தது. அதற்கு இது ஒரு நல்ல சின்னம் என்றே அவன் கருதியிருப்பான்!