பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. கொலுமன்றம்

பாரத வீரன் கொலுமன்றம் செல்வ மருதூர் வரலாற்றிலே முன்பின் காணாத ஒன்று. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் மிக மிக முக்கியமானவை. பாரத வீரன் வீரவாழ்வுக்கு அவையே அடிப்படையாய் உதவின. அவன் புகழை உச்ச அளவில் பெருக்கவும் அவை முனைப்பாகப் பயன்பட்டன.

விடியுமுன்பே நூலகமெங்கும் மூவண்ணமலர்களால்

ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. மூவண்ணங்களில் சிவப்பு வீரத்தைக் குறித்தது. நீலம் வெற்றியைக் காட்டிற்று. வெள்ளை புகழின் அறிகுறியாய் இலங்கிற்று.

மேடைமேல் மேடைகளாக இரண்டு அரியணைகள் அமைக்கப்பட்டிருந்தன. நிலமேடை இரண்டு விசிப்பலகைகளை இணைத்து அமைக்கப்பட்டிருந்தது. அதன்மீது ஒரு மூவண்ணத் திரைச் சீலை கவித்திருந்தது. இதன் மேல் இரண்டு மரப்பெட்டிகள் கவிழ்த்தப்பட்டிருந்தன. இவையே மேல் மேடைகளாகிய அரியணைகள். பொன்னாலிழைத்த பட்டுக் களால் அவை மூடப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றில் இளவரசியின் படம்தான் இருந்தது. பட உருவில் தான் இளவரசி கொலுவில் பங்கு கொள்ள இருக்கிறாள். நேரே வரமாட்டாள் என்பதை அது குறித்துக் காட்டிற்று. மற்ற அரியணை வெறுமையாகவே இருந்தது. அது பாரத வீரன் வருகைக்காக காத்திருந்தது.

நூலகத்தின் இருமருங்கிலும் இரண்டு விசிப் பலகைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் அமைச்சர்கள், படைத் தலைவர்கள், பெருமக்கள் வீற்றிருந்தனர். பொதுமக்களான வீரர்கள் எள்விழ இடமில்லாமல், எங்கும் நிறைந்திருந்தார்கள்.